பக்கம் எண் :


337


பலபத்திர ராமேசப் படலம்

எண்சீரடி யாசிரிய விருத்தம்

     பகலோனைப் பல்லுகுத்து மதியைத் தேய்த்துப் படைவேளைப்
பொடிபடுத்த பழையோன் என்றுந், திகழ்வீர ராகவேச் சரத்தினோடு
திருத்தகுகற் கீச்சரமும் புகன்றாம் இப்பால், புகழுறுகற் கீச்சரத்தின்
மேல்பால் கண்டோர் பொருவலித்திண் பகட்டூர்தி உடையக் காணும்,
நிகழ்பலபத் திரராமேச் சரமென் றோது நீடுதிருத் தானவளம் பாட
லுற்றாம்.                                              1

     சூரியனது பற்களைத் தகர்த்துச் சந்திரனைக் காலால் தேய்த்துச்
சேனைகளையுடைய மன்மதனை நீறு படுத்திய புராணன் என்றும்
விளங்குகின்ற வீரராகவேச்சரத்தினோடு செல்வ மருவிய கற்கீச்சரத்தையும்
எடுத்துரைத்தனம். இனி, புகழ் மிகும் கற்கீச்சரத்தின் மேற்கில் தரிசித்தோர்,
பொருகின்ற திண்ணிய வலிமைந்தகடாவாகனத்தையுடைய இயமனைப்
புறங்காணுதற்கு இடனாகிய பலபத்திர ராமேச்சரம் என்று பேசப்பெறும்
நிலைபெறும் திருவினையுடைய தலத்தின் வளத்தைப் பாடத் தொடங்கினோம்.

கலி விருத்தம்

மண்ணின் மிக்கு வயங்கு துவரைவாழ்
கண்ணன் முன்வரு காளை அலப்படை
அண்ண லாம்பல பத்திர ஆண்டகை
பண்ணு வெஞ்சமர்ப் பாரதம் மூண்டநாள்.             2

     மண்ணிடத்து மிக்கு விளங்குகின்ற துவாரகையில் அவதரித்த
கண்ணபிரானுக்கு முன்னர்த் தோன்றிய காளைப்பருவமும் உழுபடையும்
உடைய தலைமை அமைந்த கலப்பைப் படையினையுடைய ஆண்டகை
தேரும், குதிரையும் பிறவும் பண்ணுகின்ற போர்க்கோலம் செய்த கொடிய
பாரதப் போர் மூண்ட காலத்தில்,

கார்த்த டக்கைக் கடும்புசெய் கைதவப்
போர்த்தொ ழிற்குப் பொறாத மனத்தனாய்த்
தீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான்
ஏர்த்த வாணி நதிக்கரை எய்தினான்.              3

     மேகம்போலும் கொடையினையுடைய பெரிய கையினையுடைய
சுற்றத்தவர் செய்கின்ற வஞ்சகப் போருக்குப் பொறாத உள்ளத்தவனாய்த்
தீர்த்த யாத்திரை செய்யத் தொடங்கினான். அழகிய சரசுவதி நதிக்கரையை
அடைந்தான்.