அங்கண் முப்புரம் அட்ட பிரான்தளி எங்கும் உள்ளன நோக்கி இறைஞ்சிஅத் துங்க வைப்பினில் தொக்க முனிவரர் தங்கள் சேவடி தாழ்ந்து வினாவுவான். 4 | அக்கரையில் திரிபுரத்தை அழித்த பெருமான் வீற்றிருக்கும் திருக்கோயில்கள் எங்கும் உள்ளவற்றைக் கண்டு தொழுது அவ்வுயர்ந்த தலத்திற்குழீஇ யிருந்த முனிவரர்களைத் தொழுது வினாவுவான். ஈசன் வைகும் இடங்கள் எவைஎவை ஆசின் றோங்கும் அவற்றுளும் மேலதாந் தேசின் மிக்க திருநகர் யாவது பேசு கென்ன முனிவரர் பேசுவார். 5 | சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்கள் எவ்வெவை குற்றமின்றி உயர்வுறும். அத்தலங்களின் மேலதாய் அருள் விளக்கம் மிக்க திருக்கோயில் யாது? அதனைக் கூறுக என்று வேண்ட முனிவரர் கூறுவார். நகர்-திருக்கோயில்; ‘‘முக்கட் செல்வர் நகர்’’ (புற. 6:18.) பருவ ரைத்தோட் பரதன் வருடமே கரும பூமி எனப்படுங் காண்அது மருவும் எவ்வுல கத்தினும் மாண்டதாம் திரும லர்ப்பனந் தேந்தொடை மார்பனே. 6 | அழகின் பொலிவும் தேனும் மருவிய பனம்பூ மாலையை யணிந்த மார்பினனே! பருத்த மலையை ஒக்கும் தோள்களையுடைய படை-பரதன் ஆட்சி செய்தமையால் பெயரிய பரத கண்டமே கரும பூமி எனப்பெறும் அறிதி. அக்கண்டம் எவ்வுலகத்தினும் மாட்சிமையுடையதாகும். பலம்-கலப்பையின் கொழு. பத்திரம்-படை. கரும பூமி வரைப்பிற் கடவுளர் மருவி டங்கள் சிறந்தன மாட்சியோய் அருள்வி ளைக்கும் அவற்றினும் மேலவாம் தரும சக்கர பாணி தலங்களே. 7 | மாண்பின் மிக்கோனே! கரும பூமியாகிய பரதகண்டத்தில் தேவர் கோட்டங்கள் சிறந்தன. அருள் சுரக்கும் அவற்றினும் மேன்மைய ஆகும் அற வடிவாகிய சக்கரத்தைத் திருக்கையில் ஏந்திய திருமால் தலங்களே. அவற்றின் மிக்கன மானிடர் ஆக்கிய சிவத்த லங்கள் கடவுளர் செய்தன அவற்றின் மேலன வாகுஞ் சுயம்புவாம் சிவத்த லங்கள் அவற்றிற் சிறந்தன. 8 | |