பக்கம் எண் :


வயிரவேசப் படலம் 357


     தலைவனே! வேத முடிவில் விளங்குகின்ற விமலனே! என்னை
ஆட்கொண்ட மெய்ப்பொருளே! எனப் போற்றி நெகிழ்ந்துருகினர்.
இச்சிவலிங்கத்தே ஏற்றமாக உமையம்மையொடும் இனிது வீற்றிருந்து
அடியனேனும் நின் சந்நிதியில், எதிரிருந்து உய்யும்படி செயத் தக்க
தொண்டில் செலுத்தி அருளுக’ என்றனர்.

     வேண்டி நின்றிரந் துரைத்தலுங் கருணையான் மேவிஇங்
குறைகின்றேம், ஈண்டு நீஎதிர் வைகிஇத் திருநகர் புரந்தினி
தமர்வாயால், காண்ட குங்கபா லத்தின்நெய்த் தோரையின் கணங்களுக்
கருளென்னாப், பூண்ட பேரருள் வழங்கினன் எம்பிரான் வயிரவப்
புத்தேளும்.                                            36

     குறையிரந்து கூறலும், ‘அருளொடும் இத்திருவுருவில் விளங்குகின்றோம்.
நீயும் இங்கு வைகி இக்காஞ்சியைக் காவல் செய்து இனிதிருப்பாய். மதிக்கத்
தகும் கபாலத்தில் உள்ள இரத்தத்தை நின்கணங்களுக்கு அருளுக’ என்று
எமது பெருமான் பேரருளை நல்கினர். வயிரவரும்,

     குருதி ஈர்ம்புனல் கணங்களுக் களித்தனன் குடிப்புழிச்
சிலவேனும், பருகுதற்குப்போ தாமைகண் டவனிமேற் பறந்தலைப்
பெருவேந்தர், செருவில் ஏற்றுயிர் மடிந்தவர் விண்மிசைத் திகழஅங்
கவர்செந்நீர், இரண மண்டில வயிரவன் கணங்களுக்கினிதமைத்
தருள்செய்தான்.                                         37

     இரத்தத்தைக் கணங்களுக்குக் கொடுத்துப் பருகுங்கால் சிலர்க்கும்
பருகப் போதாமையை நோக்கி நிலமிசைப் பேரரசர் போர்க்களத்திற்
செருவினை ஏற்று உயிரிழந்தவர் துறக்கம் புக அவர் இரத்தத்தைக்
கணங்களுக்கு இரண மண்டில வயிரவராய் இனி தமைத்தருள் செய்தனர்.

     கயிர வத்தெழில் கவர்ந்தவாய் ஆய்ச்சியர் பாடியிற்
கவர்ந்ததுண்ட, தயிர வற்கயர் வொழித்தருள் வயிரவத் தம்பிரான்
தொழுதேத்தும், வயிர வப்பெயர் ஈசனை வணங்குநர் அவமிருத்துவின்
நீங்கிச், செயிர் அவத்தைகள் முழுவதுங் கடந்துபோய்ச் சிவனடி
நிழல்சேர்வார்.                                          38

     செவ்வாம்பலின் அழகைக் கவர்ந்த வாயினையுடைய ஆயர்பாடியில்
தயிரைக் கைப்பற்றி உண்ட திருமாலுக்குத் தளர்ச்சியை நீக்கி அருள்
வயிரவக் கடவுள் தொழுது போற்றும் வயிரவேசப் பெருமானாரை
வணங்குவோர் அவமிருத்துவின் நீங்கிக் குற்றம் பொருந்திய அவத்தை
பலவும் கடந்து போய்ச் சிவபிரானாரடி நீழலைச்சேர்வர்.

வயிரவேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் 1162