பக்கம் எண் :


358காஞ்சிப் புராணம்


விடுவச்சேனேசப் படலம்

கலிநிலைத் துறை

போதணி பொங்கர் உடுத்ததண் கச்சிப் புரத்திடை
மாதர்வண் கோயில் வயிரவே சத்தை வகுத்தனம்
ஆதியும் அந்தமும் இல்லான் அமர்ந்தருள் அங்கதன்
மேதகு தென்பால் விடுவச்சே னேச்சரம் விள்ளுவாம்.    1

     மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த காஞ்சிமா
நகரில் அழகிய வளமமைந்த வயிரவேசத் திருக்கோயிலை வகுத்துரைத்தனம்.
தோற்றமும் அழிவுமில்லாத சிவபிரான் விரும்பி எழுந்தருளி அருள்
செய்கின்ற அத்தலத்திற்குத் தெற்கில் மேன்மை பொருந்திய விடுவச்
சேனேச்சரத்தை விளம்புவாம்.

திருமால் சக்கரம்இழந் தயர்தல்

வெந்தொழில் தக்கனார் வேள்வி விளிந்தநாள் மாயவன்
சந்திர சேகரன் தாளினை ஏத்தி விடைகொண்டே
அந்தண் விரசை கடந்துவை குந்தம் அடைந்தபின்
சுந்தரப் பொன்தவி சேறி இருந்திது சூழ்ந்தனன்.      2

     கொடிய செயலையுடைய தக்கனது யாகம் முற்றுறா தழிந்த நாளில் 
திருமால் சந்திர மௌலியர் திருத்தாட் டுணைகளைத் துதித்து விடைபெற்று
அழகிய தண்ணிய விரசை யாற்றினைக் கடந்து வைகுந்தத்தை அடைந்த
பின்னர் அழகிய பொன்னாலியன்ற ஆசனத்தில் ஏறியிருந்திதனை
ஆராய்ந்தனர்.

மலைவறு காட்சி விடுவச்சே னன்முதல் மந்திரித்
தலைவர் தமக்கு நிகழ்ந்தது சாற்றிக் கவன்றனன்
குலவும் அரக்கர் அவுணரைப் போரிற் கொலைசெய்திவ்
வுலக முழுவதும் ஓம்புதல் என்தொழி லாகுமால்.     3

     தன்னொடு மாறுபடாத அறிவினையுடைய விடுவச் சேனன் முதலான
மந்திரித் தலைவர் தமக்கு நிகழ்ந்ததை விரித்துரைத்துக் கவலை யெய்தினர்.
‘தலைமை பூணும் அரக்கரையும், அசுரரையும் போர்க்களத்திற் கொன்று
நல்லோரை இவ்வுலகங்கள் முற்றவும் காத்தல் எனக்குரிய தொழிலாகும்’.

     ஆல், தேற்றமும், இரக்கமும் குறித்து நின்றது.

ஏயும் அலங்கரத் தின்றித் தொடங்கும் உழவன்போல்
ஆயுதங் கைஇன்றி எவ்வா றகிலம் புரப்பல்யான்
காய்கதிர் மண்டிலந் தோற்றுங் கடவுள்மா சக்கரம்
மாய்வரும் யாக்கைத் ததீசியி னால்வாய் மடிந்ததே.    4