‘முதன்மை பெறும் உழுபடையின்றி உழவைத் தொடங்கும் உழவன் செய்கைபோலச் சக்கராயுதம் கரத்தினிடத்தில்லாமல் எங்ஙனம் அகில லோகங்களையும் யான் காப்பேன்! சூரிய மண்டிலத்தை ஒத்துத் தோற்றுவிக்கின்ற ஒளியினையும் தெய்வத்தன்மையையும் பெருமையையும் உடைய சக்கரம் அழிவில்லாத ததீசியின் உடம்பினால் கூர் மழுங்கியதே. அறுசீரடி யாசிரிய விருத்தம் மதனுடைத்திண் சலந்தரனை உயிர்செகுப்பச் சிவபெருமான் வகுத்த சோதிச், சுதரிசனப் படைஅன்னோன் தரப்பெற்றேன் அஃதின்று தக்கன் வேள்வி, சிதைவுசெயுந் திறல்வீர பத்திரன்மேல் விடுத்தலும்அச் செல்வன் பூண்ட, கதமுறுவெண் டலைஒன்று கவ்வியதால் இனிச் செய்யக் கடவ தென்னே. 5 ‘உடல் வன்மையும் உள்ளத்துத் திண்மையும் உடைய சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுச் சிவபிரானார் சிருட்டித்த ஒளியுடைய சுதரிசனம் என்னும் படையை அப்பெருமானால் அருளப் பெற்றேன், அச்சக்கரம் இன்று தக்கன் வேள்வியை அழித்த வலிமை பொருந்திய வீரபத்திரர்மேல் விடுத்தபொழுது அவ்வீரர் அணிந்துள்ள சினமிக்க வெண்டலை மாலையில் ஓர்தலை அதனை விழுங்கியது, ஆகலின் இனிச் செய்யத் தக்கது என்னே! சக்கரத்தைச் சிருட்டி செய்ததும், திருமால் அதனைப் பெற்றதும் சலந்தரேசத் திருமாற் பேற்றுப் படலங்களுட் காண்க., நஞ்சுபடு துளைஎயிறு தனைஇழந்த நாகத்தின் உயிர்ப்பும் ஒன்னார், அஞ்சுதகத் தலைச்செல்லுங்கோடிழந்த கடாக்களிற்றின் அடலும் ஏற்றார், நெஞ்சுருவப் பாயும்இரு மருப்பிழந்த விடைஏற்றின் நெறிப்பும் கூர்வாய், வஞ்சநெடும் படைஇழந்த மதவீரன் வீறும்எவன் செய்யும் மாதோ. 6 விடம் ஊறுகின்ற துளையுடைய பற்களை இழந்த பாம்பின் நெட்டுயிர்ப் பெறிதலுடன் கூடிய வெகுளியும், பகைவர் அஞ்சமேற்சேறுந் தந்தங்களை யிழந்த மதயானையின் அடும் ஆற்றலும், போரினை ஏற்று நின்றவர் மார்பிடை உருவும்படி பாயும் இருகொம்பினையும் இழந்த காளை ஏற்றின் நிமிர்ப்பும், கூரிய வாயினையுடைய வஞ்சகப் பெரும் படையை இழந்த வலிய வீரன் செருக்கும் என் செய்யும். ஆழிகரத் துளதாயின் சிவனருளால் வியனுலகம் அளிப்பேன் அன்றிப், பாழிவரைத் தடம்புயத்தீர் என்செய்வேன் எனக்கவன்று பரியுங் காலை, வாழிநெடும் பொலஞ்சிறைய புள்ளூர்தி தனக்கிரண்டாம் வடிவ மான, காழிகந்த பெருங்கீர்த்தி உலம்பொருதோட் கனைகழற்கால் விடுவச் சேனன். 7 |