பக்கம் எண் :


இரணியேசப் படலம் 395


கண்டிகை நீறு மெய்யிற் கவின்றிட இவ்வா றங்கண்
அண்டனைத் தொழுது மெய்ப்பே றடைகெனுங் குரவன் பாத
புண்டரீ கங்கள் போற்றி எழுந்தனன் பொறிவண் டூதுந்
தண்டலைக் காஞ்சி நோக்கி நடந்தனன் தறுக ணாளன்.    17

     உருத்திராக்க வடமும், திருநீறும் திருமேனியில் அழகு செய்ய
இங்ஙனம் அவ்விடத்தே அண்டங்களெல்லாவற்றையும் உடைய பிரானைத்
தொழுது உண்மைச் செல்வத்தை அடைக’ என்று கூறிய ஆசாரியனாகிய
சுக்கிரன் பாத மலர்களைப் பணிந்து எழுந்து அழகிய வண்டுகள் நுகரும்
மலர்களையுடைய சோலை சூழ் காஞ்சியை நோக்கி வன்கணனாகிய
இரணியன் வழிக்கொண்டனன்.

தன்னுடன் பிறந்தகேண்மைத் தானவன் இரணி யாக்கன்
அன்னவன் தனையன் அந்த காசுரன் பிரக லாதன்
முன்னுறு புதல்வர் அன்னோர் வழிவரும் உரியர் தேசின்
மின்னுமா வலியே வாணன் விரோசனன் முதலி யோரும்.   18

     தன்னுடன் தோன்றிக் கெழுமிய அசுரனாகிய இரணியாக்கனும், அவன்
மகன் அந்தகாசுரனும், தன்மகன் பிரகலாதனும், முன்னர்க்கூறிய புதல்வர்
வழிவந்தோராகிய புகழொளி படைத்த மாவலியும் அவன்மகன் வாணனும்,
பிரகலாதன் மகனாகிய விரோசனனும் ஏனையோரும்,

பற்றுகா யாதி யாதி மனைவியர் பலரும் ஏனைச்
சுற்றமும் ஒருங்கு காஞ்சி தென்னகர் எய்தித் தாந்தாம்
பெற்றிடும் பெயரான் முக்கட் பிரான்குறி நிறுவிப் போற்றக்
கொற்றமார் முப்பு ராரி கோட்டத்தின் குணபால் எய்தி.    19

     விருப்புடைய காயாதி முதலிய மனைவியர் பலரும் ஏனையோராகிய
சுற்றத்தினரும் உடன்வரக் காஞ்சியாகிய திருநகரை அடைந்து தத்தம்
பெயரால் இலிங்கம் தாபித்துத் துதி செய்ய வெற்றி அமைந்த முப்புராரி
கோட்டத்திற்குக் கிழக்கில் எய்தி,

தன்பெயர் இலிங்கம் ஒன்று தாபித்துக் குரவன் கூறும்
அன்புடை முறைமை யாறே அருச்சனை யாற்றி உண்டி
இன்பமும் வெறுத்துப் பன்னாள் மெய்த்தவம் இயற்றும் ஏல்வைப்
பொன்பொதி சடிலப் புத்தேள் எதிரெழுந் தருளப் போற்றி.    20

     ‘இரணியேசப் பிரான்’ எனத் தன் பெயரால் சிவலிங்கம் நிறுவிச்
சுக்கிராசாரியர் அறிவுறுத்த வழியே அன்பினால் அருச்சனை செய்து
உணவையும், இன்பத்தையும் வெறுத்துக் கைவிட்டுப் பலநாள் உண்மைத்
தவத்தைச் செய்வுழிப் பொன்னைப் பொதிந்தாற் போன்ற சடையினையுடைய
சிவபிரான் எதிரில் காட்சி தந்தருளப் போற்றி செய்து’