பக்கம் எண் :


396காஞ்சிப் புராணம்


மக்களின் விலங்கின் மற்றை யோனியில் மண்ணில் விண்ணில்
உக்கதீப் படைகள் தம்மின் உணங்கலின் ஈர மென்னத்
தக்கதிற் புறம்பின் உள்ளிற் பகலினில் இரவிற் சாவாப்
பொக்கமில் வரமும் மும்மைப் புவனமும் புரக்கும் பேறும்.   21

     மக்களாலும், விலங்குகளாலும், ஏனைய உயிர் வருக்கங்களாலும்,
தீயையுமிழும் படைகளாலும் மண்ணிடத்தும், விண்ணிடத்தும், உலர்ந்த ஈரிய
இடங்களிலும், புறத்தினும், அகத்தினும், பகலினும், இரவினும் இறவாத
பொய்படாத வரத்தையும், முப்புவனங்களையும் காவல் செய்யும்
செல்வத்தையும்,

எம்பிரான் அருளக் கொண்டான் இரணிய கசிபும் ஆசை
அம்பகன் முதலி யோரும் அவரவர்க் கினிய பெற்றார்
வம்பலர் மலரிட் டன்னோர் வழுத்திய தலங்களோடும்
உம்பர்சூழ் இரணி யேசம் உத்தமச் சிறப்பின் ஓங்கும்.    22

     எமது பெருமான் அருள் செய்ய இரணிய கசிபும் பெற்றனன்.
இரணியாக்கன் முதலியோரும் அவரவர்க்கு விருப்புடைய வரங்களைப்
பெற்றனர். அப்பொழுதலர்ந்த மலர்களைத் தூவி அவர்கள் வழிபாடு செய்த
தலங்களுடன் விண்ணவர் வலம் வரும் இரணியேசம் பெருஞ் சிறப்புடன்
ஓங்கும்.

     இரணிய கசிபு-பொன் வடிவினன், இரணியாக்கன்-பொற்கண்ணன்.
ஆசை-பொன், அம்பகம்-கண். ஆசை அம்பகன்-பொற்கண்ணன்.

இரணியேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 1303

நாரசிங்கேசப் படலம்

கலி விருத்தம்

தரணி மேற்புகழ் தாங்கிய காஞ்சியின்
இரணி யேச்சர மேன்மை இயம்பினாம்
அரணி லைத்த அதன்குட பாங்கரின்
முரணி னாரசிங் கேசம் மொழிகுவாம்.            1

     நிலவுலகிற் புகழ் பூண்ட காஞ்சியில் அமைந்த இரணியேசப்
பெருமையை எடுத்துரைத்தோம். காவல் நிலைபெற்ற அதற்கு மேற்றிசையில்
திரிபில்லாத நரசிங்கேசப் பெருமானார் இயல்பைக் கூறுவோம்.