சலந்தரன் வெற்றி சலத்திடைத் தோன்றியோன் சலந்தரப் பெயரிய குலப்புகழ்த் தானவன் கோநகர்க் காஞ்சியில் நலச்சிவ லிங்கம்ஒன் றமைத்துநா ளுந்தொழு துலப்பரு மெய்த்தவம் உஞற்றினான் அவ்வுழி 2 | சலத்தில் தோன்றினமையால் சலந்தரன் எனப் பெயர் பெற்ற மேன்மையுடைய புகழமைந்த அசுரன் தலைநகராகிய காஞ்சியில் நலமுடைய சிவலிங்கம் நிறுவி நாளும் வணங்கிக் கெடுதலில்லாத மெய்த்தவத்தைப் புரிந்தனன். புரியுங்காலை, காட்சிதந் தருளிய கண்ணகன் மாநிழல் ஆட்சியார்த் தொழுதெழுந் தாண்மையும் மதுகையும் மாட்சிசால் இறைமையும் மாற்றலர்த் தெறுதலும் மீட்சிஇன் றருளென வேண்டினான் பின்னரும். 3 | திருக்காட்சி தந்தருளிய மாநீழலில் அரசுபுரி திருவேகம்பரைத் தொழுதெழுந்து ‘வீரமும், வலிமையும், மாண்பு மிகு அரசுரிமையும், பகை வரை அழித்தலும் நீக்க மின்றி நிலைபெற அருள்செய்வாய்’ என இரந்தனன். பின்னரும், நின்னலால் என்னுயிர் நீப்பவர் இன்மையும் துன்னரு முத்திஇச் சூழலிற் பெறுவதும் பின்னல்வார் சடையினாய் அருளெனப் பெற்றுமீண் டன்னவா றுலகுதன் அடிப்படுத் தாளும்நாள். 4 | ‘நின்னையன்றிப் பிறர் எவரும் என்னுயிரை நீக்குநர் இன்மையும், பெறற்கரிய முத்தியை இத்தலத்தே பெறுகையும் பின்னிக்கிடக்கின்ற நீண்ட சடையுடையாய்! இவ்வரங்களை அருளா’யென்று பெற்றுப்போய் அவ்வாறே உலகைத் தன்னடிக் கீழ்ப்படுத்தி ஆளு நாளையில், இந்திரன் முதலிய எண்டிசைக் கிறைவரைக் கந்தமேன் மலர்மிசைக் கடவுளை வென்றுபின் பைந்துழாய்க் குரிசிலைப் பன்னகப் பகையொடும் வெந்திறல் நாகபா சத்தினால் வீக்கினான். 5 | இந்திரன் முதலிய எண்டிசைத் தலைவரையும், பிரமனையும், வென்று பின்னர்த் திருமாலைப் பாம்பிற்குப் பகையாகிய கருடனொடும் வெவ்வலி யுடைய நாகபாசத்தினால் பிணித்தான். சிறையிடை மாட்டினன் சிற்சில நாட்செல அறைகழல் வானவர் வணங்கிநின் றவுணனைக் குறைஇரந் தனையனைக் கொண்டுமீண் டேகினார் பிறைஎயிற் றவுணனும் பெருமிதத் துறையும்நாள். 6 | |