பக்கம் எண் :


450காஞ்சிப் புராணம்


     சிவபிரான் வருகையைக் கண்டு பயந்து நெருங்கி யிருந்த தேவர்
ஓட்டம் எடுப்பப் பெருமானை நோக்கி நிறைந்த மகிழ்ச்சி மிகத் திருநெடுமால்
பூமியில் வீழ்ந்து வணங்கி விதிப்படி எட்டுறுப்பும் ஐந்துறுப்பும் நிலத்திற்
பொருந்த வணங்கிக் கரங்களைச் சிரமிசைக் கூப்பி மறை மொழியினால்
துதி செய்து கூத்தாடி அன்பினால் ஒழுகுகின்ற கண்ணீர் வெள்ளத்துள்
திளைத்தனர்.

     நணியராயும் தவப்பயனின்மையின் ஓட்டெடுத்தனர்.

     ஆங்கவனை எதிர்நோக்கி நின்பூசைக் ககமகிழ்ந்தேம் உனக்கிஞ்
ஞான்று, தேங்கமல விழியளித்தேம் பதுமாக்கன் எனும் பெயரின்
திகழ்வாய் இவ்வூர், பாங்குபெறு திருமாற்பே றெனப் பொலிக
என்றருளிப் பானுகோடி, தாங்குகதிர்ச் சுதரிசனப் பெயராழித்
தனிப்படையும் உதவி எங்கோன்.                           13

     திருமாலை எதிர்நோக்கி ‘நீ செய் பூசனைக்குத் திருவுள்ளம்,
மகிழ்ந்தோம்; இந்நாள் உனக்குத் தேன் மருவிய தாமரை மலர்க் கண்ணை
வழங்கினோம். ஆதலின், தாமரைக் கண்ணன் என்னும் பொருள் கொண்ட
‘பதுமாக்கன்’ என்னும் பெயரொடு விளங்குவாயாக. இத்தலம் தகைமை பெறு
திருமாற் பேறெனப் பொலிவதாக!  என்றருள் செய்து கோடி சூரியர் தம்
கிரணங்களைத் தாங்கிய ‘சுதரிசனம்’ என்னும் சக்கரமாகிய ஒப்பற்ற
படையையும் எங்கோன் உதவி,

     வெல்லரிய செறுநரையும் இப்படையால் வெல்வாயால் ஈண்டு
நின்னாற், சொல்லியபேர் ஆயிரங்கொண் டெமைப்பூசை புரிவார்க்குத்
துகள்தீர்த் தென்றும், எல்லையிலா வீடளிப்பேம் இங்கிவையன்
றியுந்தீண்டச் சிவந்தா ராதிப், பல்குபெயர் கொண்டெம்மைத்
தொழுவோரும் முத்தியினிற் படர்வார் உண்மை.              14

     ‘வெல்லுதற் கியலாத பகைவரையும் இச்சக்கரப் படையால் வெல்க.
இவண் நின்னால் அருச்சனையாகச் சொல்லப்பெற்ற திருப்பெயர் ஆயிரமும்
கொண்டெம்மைப் பூசனை செய்வார்க்குக் குற்றங்களைத் தவிர்த்து என்றும்
வரம்பிகந்த முத்திப்பேற்றினை அளிப்போம். இவையே அன்றியும் தீண்டச்
சிவந்தார் முதலிய பல திருநாமங்களைக் கொண்டெம்மை அருச்சிப்போரும்
முத்தியிற் கலப்பார். ஈ துண்மை யாகும்!

     தணிவொன்று மனமுடையார் புகழ்தீண்டச் சிவந்தபிரான்
சாதரூபர், மணிகண்டர் தயாநிதியார் பவளமலை யார்வாட்டந்
தவிர்த்தார் பாசப், பிணிவிண்ட சாகிசனர் திருமாற்குப் பேறளித்தார்
எனும்பேர் எட்டும், அணிகொண்ட ஆயிரம்பேர்க் கொப்பனவாம்
அறிமதிஎன் றருளிச் செய்தான்.                           15