தேனொழுகும் இதழ்கள் செறிந்த செழுமிய பொகுட்டினையுடைய தாமரை மலர் ஆயிரத்துள் ஒன்று மறையத் திருவுள்ளத் தெண்ண நீர் கொண்ட மேகத்தை வருத்தும் கரிய நிறமேனியையுடைய திருமாலும் பண்டுபோலப் பவன முதலாம் ஆயிரம் திருநாமம் எடுத்தோதிக் குன்றுதலில்லாத பேரன்பினொடும் தாமரை மலரைக் கொண்டு அருச்சனை செய்யும்பொழுது, பன்னும்ஒரு திருபெயர்க்கு நறுங்கமலங் காணாமைப் பதைத்து நோக்கி, என்னினிமேற் செயலென்று தெரிந்துணர்ந்து தனதுவிழி இடந்து பெம்மான், கொன்மலர்த்தாள் மிசைச்சாத்திக் களிகூர்ந்தான் உறுப்பினையும் கொடுப்ப தல்லால், மென்மையுறத் தாங்கொண்ட விரதத்தை விடுவர்களோ கொள்கை மேலோர். 10 முடிவில் எடுத்தோதும் ஓர் திருநாமத்திற்கு நறிய தாமரை மலர் காணப் பெறாமையால் மனம் பதைத்து நோக்கி இதற்குமேற் செயல் யாதென் றாராய்ந்துணர்ந்து தமது விழியைப் பெயர்த்துப் பெருமானாருடைய பெருமை பொருந்திய மலர்போலும் திருவடியில் சாத்திக் களிமிகுந்தார். உடலுறுப்புக்களைக் கொடுத்தும் தாங்கொண்ட கொள்கையை நிறுத்துவர் அன்றித் தளர விடுவர்களோ கொள்கையினால் உயர்ந்தோர். ‘ஊக்கித் தாம்’ (நாலடி-57) செய்யுளை எண்ணுக. இறைவன் திருமாலுக்குச் சக்கரம் அருளல். பாறிலகு மழுப்படையோன் மாயவன்றன் அன்பின்ஒருப்பாடு நோக்கி, மாறிலாப் பெருங்கருணை ஊற்றெடுப்பச் செழுஞ் சோதி மலரப் பாங்கர், நூறியோ சனைஅளவும் எரிகொளுந்த நோக்கரும்பே ருருவு தாங்கி, ஈறிலாக் கதிர்இரவி மண்டிலநின்றிழிந்தெதிரே காட்சி ஈந்தான். 11 பருந்துகள் சூழு மழுப் படையை யுடைய பிரானார் திருமால் அன்பின் ஒருமையை நோக்கி என்றும் திரிபில்லாத பெருங்கருணை பெருக்கெடுப்பவும் பேரொளி பக்கங்களில் விரியவும், நூறு யோசனை அளவும் எரி சுடவும் கண்ணொளி மழுங்கவும் ஆகிய பெருவடிவு தாங்கி அழிவில்லாத கிரணங்களையுடைய சூரிய மண்டிலத்தினின்றும் இழிந்தெதிரே காட்சி ஈந்தனர். ‘‘மாறிலாதமாக் கருணை வெள்ளமே” (திருவாசகம்) என்புழிக் காண்க. சூரிய மண்டிலத்தில் இறைவன் எழுந்தருளியிருத்தல்: ‘‘அப்பரிதி மண்டலம்வளர். அரும்பெருஞ் சுடரை ஏய்ப்ப” (மீனாட்சி. பிள்: 93) ‘‘ஊன்பிலிற்று மழுவாளி” (பாயிரம்.) இறைவரவு கண்டஞ்சிப் புடைமருவும் இமையவர்ஓட் டெடுப்ப நோக்கி, நிறைஉவகை தலைசிறப்பத் திருநெடுமால் இருநிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து, முறைமையினால் அட்டாங்க பஞ்சாங்க முறவணங்கி முடிகை ஏற, மறைமொழியின் துதித்தாடி ஆனந்த விழிமாரி வெள்ளத் தாழ்ந்தான். 12 |