பக்கம் எண் :


சருவதீர்த்தப் படலம் 485


விசுவநாதேச்சரம்

பாற்றினம் மிடைந்த கூர்வாய்ப் படைமழுக் குடங்கைப் புத்தேள்
மாற்றருங் கருணை முந்நீர் வாரியின் நிறைந்து தேங்கும்
நாற்றிசை அணவுஞ் சீர்த்தி நளிபுனல் சருவ தீர்த்த
மேற்றிசைக் கரைக்கண் மேவும் விச்சுவ நாதத் தானம்.      21

     பருந்துகள் செறிகின்ற கூரிய பரசு என்னும் படையினை அகங்கையிற்
கொண்ட பிரானாரின் கெடலரிய கிருபா சமுத்திரத்தை ஒத்துத் தேங்கும்
நாற்றிசையினும் பரவிய மிகுபுகழுடைய பெருமை அமைந்த சருவ
தீர்த்தத்தின் மேற்றிசைக் கரையில் விசுவநாதேசம் விளங்கும்.

     ‘‘தடவுங் கயவும் நளியும் பெருமை’’ (தொல். உரி )

மலர்தலை உலகின் முக்கண் வானவன் இனிது வைகுந்
தலமெலாம் மருவுங் காஞ்சி விச்சுவ நாதன் றன்பால்
கலிபுகழ் விசுவ நாத முதல்வனுங் காசி தன்னில்
இலகொளி மாடக் காஞ்சி நகர்எமக் கினிதென் றெண்ணி.    22

     இடமகன்ற உலகில் கண்ணுதற் பரமனார் இனி தெழுந்தருளியிருக்கும்
தலமெலாம் விளங்கும் காஞ்சி விசுவநாதரும் இத்தலத்துக் கலி என்னும்
யுகம் போற்றும் விசுவநாத முதல்வனும் காசியினும் மிக்கொளிர்கின்ற
மாடங்களைக் கொண்ட காஞ்சிநகர் எமக்கு இனிதாகும் என்று
திருவுளங்கொண்டு,

வெள்ளிவெண் கயிலை யாதி இடங்களின் மேன்மை சான்ற
அள்ளலம் பழனக் காஞ்சி யணிநகர்ச் சருவ தீர்த்தப்
பள்ளநீர்க் கரைக்கண் எய்தி வைகினன் பரிவால் அங்கண்
வள்ளலைத் தொழுது முத்தி மண்டபங் காண்போர் முத்தர்.   23

     பெரிதும் வெள்ளிய கயிலைமலை முதலிய இருக்கைகளின் மேன்மை
யமைந்த சேறு நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய காஞ்சிமா நகர்க்கண்
உள்ள சருவ தீர்த்தம் எனப் பெயரிய ஆழமுடைய நீர் நிலையின் கரையில்
வீற்றிருந்தனன். அத்தலத்தில் வள்ளலை அன்புடன் தொழுது முத்தி
மண்டபத்தினையும் தரிசிப்போர் பாசநீக்கம் பெற்றவராவர்.

முத்தி மண்டபம்

மண்டப வருநாள் செல்லாக் காஞ்சிமா நகரின் மூன்று
மண்டபந் திகழும் முத்தீச் சரத்தெதிர் வயங்கும் முத்தி
மண்டபம் ஒன்று சார்வ தீர்த்தத்தின் மருங்கு முத்தி
மண்டபம் ஒன்று கண்டோர் தமக்கெலாம் வழங்கு முத்தி.    24

     உலகழியுங்காலமும் அழியாத காஞ்சிமா நகரில் மூன்று மண்டபங்கள்
விளங்கும்: முத்தீச்சரத் தெதிரில் விளங்கும் முத்தி மண்டபம் ஒன்று; சருவ
தீர்த்தத்தின் மேற்குக் கரையில் மண்டபம் ஒன்று; கண்டோர் யாவர்க்கும்
முத்தியை நல்கும்,