பக்கம் எண் :


486காஞ்சிப் புராணம்


இராமேச்சரம் - பரமாநந்த மண்டபம்

உருவமென் கமலம் பூத்த உயர்சிவ கங்கைத் தென்பால்
திருவிரா மேச்ச ரத்துச் சிவபிரான் திருமுன் னாக
இருவினைப் பிறவிக் கஞ்சி எய்தினோர்க் குறுபே ரின்பம்
மருவுறும் பரமா நந்த மண்டபம் ஒன்று மாதோ.        25

     வடிவுடைய மெல்லிய தாமரை மலர்கள் கெழுமிய உயர்ந்த சிவ
கங்கையின் தென் திசையில் உள்ள திருவிராமேச்சரத்தில் சிவபிரான்
திருமுன்னாக இருவகையாய வினையால்வரும் பிறவியை அஞ்சி
அடைந்தவர்க்கு உறுகின்ற பேரின்பம் பொருந்தும் பரமானந்த மண்டபம்
ஒன்று;

மண்டபம் இனைய மூன்றும் வைகறை எழுந்து நேசங்
கொண்டுளம் நினையப் பெற்றோர் உணர்வெலாங் கொள்ளை
                                              கொண்ட
பண்டைவல் வினையின் வீறும் பற்றிய மலங்கள் மூன்றும்
விண்டுபே ரின்ப வெள்ள வேலையில் திளைத்து வாழ்வார்.     26

     இம் மூன்று மண்டபங்களையும் வைகறையில் எழுந்து விருப்பம்
வைத்து உள்ளத்தில் எண்ணப் பெற்றோர் தம் அறிவு முழுதினையும்
அகப்படுத்த பழைய வலிய வினையினுடைய செருக்கையும், பற்றிய மலங்கள்
மூன்றனையும் நீங்கிப் பேரின்பக் கடலில் துளைந்து வாழ்வார்.

சருவ தீர்த்தப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 1644

நவக்கிரகேசப் படலம்

கலிநிலைத் துறை

தழங்குபெரும் புனற்பரவைச் சருவ தீர்த்தத் தடங்கோட்டின்
முழங்குமறித் திருக்கரத்து முதல்வன் இடங்கள் எடுத்துரைத்தாம்
வழங்குவளிக் கடவுளும்ஒன் பதிற்றுக் கோளும் வழிபட்ட
குழங்கல்நறுந் தொடைக்கொன்றைக் குழகன் தளிகள்
                                        இனிப்புகல்வாம்.

     ஒலிக்கின்ற பெரிய நீர்ப் பரப்பினையுடைய சருவ தீர்த்தத்தடங்
கரையில் ஒலிக்கின்ற மானை ஏந்திய திருக்கரத்தினையுடைய முதல்வன்
இருக்கைகளை எடுத்துரைத்தோம். உலவுகின்ற வாயுதேவனும், நவக்
கிரகங்களும் வழிபாடு செய்த கொன்றை மலர் மாலையை அணிந்த
குழகனுடைய திருக்கோயில்களை இப்பொழுது கூறுவோம்.

     குழங்கல்-மாலை விசேடம், வழங்குதல், இயற்கை அடை.