பக்கம் எண் :


492காஞ்சிப் புராணம்


அன்னத் தோன்றல் அடிகள் போற்றி விடைகொடு
நன்னர்க் காஞ்சி நகரம் நண்ணி நாயகன்
றன்னைத் தாபித் தேத்திச் சாவா மாட்சியின்
மன்னப் பெம்மான் உதவப் பெற்று வாழ்ந்தனர்.    5

     பிரமனை வணங்கி விடைகொண்டு நலமுடைய காஞ்சியை நண்ணிப்
பிரானை இருத்திப் புகழ்ந்து இறவாத இயல்பினில் நிலைபெறும்படி பெருமான்
அருள் செய்யப் பெற்று வாழ்ந்தனர்.

சுவேதன் என்பான் வாழ்நாட் கழிவு துன்னுநாள்
சுவேதந் தீற்று மாடச் சூழல் அதனிடைச்
சுவேத நல்லான் ஊர்தி நோன்தாள் தொழுதனன்
சுவேத நீற்றான் நீத்தான் இறவித் துன்பமே.       6  

     வெண்ணிற விபூதியினனாகிய சுவேதன் இறக்குந் தருவாயில்,
வெண்சுதை தீட்டிய மாடங்களைக் கொண்ட இறவாத்தானத்தில் வெண்ணிற
நல்விடைப் பிரானாருடைய இயமனை உதைத்த வலிய தாளைத் தொழுது
இறப்பினால் வருந் துன்பத்தைத் தவிர்த்தனன்,

மார்க்கண் டேயன் அங்கண் போற்றி மறலியைத்
தாக்கி நிலைமை பெற்றான் சாலங் காயினன்
ஆக்க மைந்தன் மகனும் அங்கண் ஏத்துபு
சாக்கா டற்றான் கணநா தச்சீர் தழுவினான்.       7

     மார்க்கண்டேய முனிவர் அங்கு வழிபாடு செய்து இயமனைத் தாக்கி
இறவாத நிலைமையைப் பெற்றனர். சாலங்காயினர்க்கு மகன் மகனாகிய
பெயரனும் அவ்விடத்தில் ஏத்தி இறப்பொழிந்து கணநாதர் பதத்தினைப்
பெற்றனன். ஆக்கம்-மேன்மேலுயர்தல்.

ஆயுள் மாய்வின் இன்னும் அங்கண் எண்ணிலர்
தூய அன்பின் தொழுது நிலைமை பெற்றனர்
ஏய வாற்றால் ஆயுள் வேட்டோர் யாவரும்
பாய சீர்த்தி இறவாத் தானம் பணிகவே.         8

     மேலும் அவ்விடத்தளப்பிலார் ஆயுள் முடிவு நாளில் உள்ளன்பொடும்
தொழுது என்றும் வாழும் நிலைமையை எய்தினர். பொருந்தும் இம்முறையால்
வாழ்நாளைப் பெருக்கிக் கொள்ள விரும்புவோர் யாவரும் பரவிய மிகு
புகழுடைய இறவாத்தானத்தில் வழிபடுக.

இறவாத்தானப் படலம் முற்றிற்று

ஆகத் திருவிருத்தம்-1668