பக்கம் எண் :


493


மகாலிங்கப் படலம்

கலிநிலைத் துறை

வெள்ளைத் திங்கட் பிள்ளைக் கீற்று மிளிர்சடை
வள்ளற் கோமான் இறவாத் தானம் வாழ்த்தினாம்
கிள்ளைச் சொல்லார் பயிலும் அதனின் கீழ்த்திசை
விள்ளற் கருமா லிங்கத் தானம் விள்ளுவாம்.       1

     இளம் பிறையை அணிந்த சடைமுடியையுடைய வள்ளற் பெருமானது
இறவாமைக்கு ஏதுவாகிய தானத்தை வாழ்த்தினோம். இனி, கிளியை ஒக்கும்
மெல்லிய மொழியினராகிய மகளிர் பயிலும் அதன் கிழக்குத் திசையில்
விளம்புதற்கரிய சிறப்பினையுடைய மகாலிங்கத்தானத்தை இயன்ற அளவு
விளம்புவாம்.

பிரமனும் மாலும் பெரும்போர் புரிதல்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

வையம் முழுதும் மடிய வரும்ஓர் ஊழி முடிவின்
வெய்ய இருள்வந் தடர விரிநீர்ச் சலதி வேகஞ்
செய்து நிமிர்ந்து பொங்கித் தேங்கிக் கிடந்த காலைப்
பைய உறக்கம் நீத்து மீளப் படைக்க உன்னி.      2

     உலக முழுதும் அழியவரும் ஓர் கற்ப முடிவில் கொடிய இருள் வந்து
மூட விரிந்த நீரையுடைய கடல் விரைந்து மேனோக்கி நிவந்து சலப்
பிரளயமாய் உலகை விழுங்கித் தேங்கிக் கிடக்கும் நிலையில் உறக்கத்தை
மெல்ல விடுத்து மீளவும் உலகைப் படைக்க எண்ணி,

துங்கத் தனது நகரிற் சுடரும் மறையின் கிழவன்
எங்கும் அலைகள் புரளகப் புணரி வெள்ளம்
தங்கு செயலை நோக்கித் தடவுக் கருவி முகில்போய்
அங்கண் அரவில் துயிலும் ஐயன் றனையுங் கண்டான்.    3

     உயர்வுடைய மனோவதி என்னும் தனது நகரில் விளங்குகின்ற பிரமன்
யாண்டும் அலைகள் மறித்து வீச ஒன்றுபட்ட கடல் நீர்ப்பெருக்கு
நிலைபெற்றுள்ள நிகழ்ச்சியைக் கண்டு பெருமை பொருந்திய தொகுதியை
யுடைய கரிய மேகம்போல அவ்விடத்து ஆதிசேடனாகிய பாயலில்
அறிதுயில் கொள்ளும் தனது தந்தையையும் கண்டனன்.

     கருவி-இடி, மின், முழக்கம் முதலிய தொகுதியையுடைய மேகம்.

கண்டு புடையி னணுகிக் கடுக எழுப்பி மையல்
கொண்டு நீயார் என்று வினவக் கொண்ட லனையான்
அண்டம் முழுதுங் காக்கும் அகில முதல்வன் யானே
மிண்டு நீயார் என்பால் வேட்ட தென்கொல் என்றான்.    4