வீராட்ட காசங் கடைக்கால் வியன்மலர்கொண் டாராப்பே ரன்பின் அருச்சித் ததன்தென்பால் ஏராரத் தத்தம் பெயர்சாத்தி எல்லாரும் தாரார்த்த கொன்றைச் சிவலிங்கந் தாபித்தார். 5 | இறுதியாக வீராட்டகாசப் பெருமானை வேற்றுமைப்பட்ட மிகுதியாகப் பன்மலர்களைக் கொண்டு அடங்காத பேரன்பொடும் அருச்சனை செய்து அத்தலத்திற்குத் தெற்கில் யாவரும் தத்தம் பெயரால் அழகுற மாலையாகத் தொடுத்த கொன்றை மலரை அணிந்த சிவலிங்கங்களை நிறுவினர். வியல்-வேற்றுமைப்பட்ட மிகுதியுமாம். ‘வியன்கலம்’ (சிலப். இந்தி.7) உரை காண்க. அறமைந்தன் வீமன் விசயன் அலர்பூந்தார் நறவிண்ட திண்தோள் நகுலசகா தேவர் மறனின்றி இன்னோர் மனைக்கிழமை புண்ட முறையொன்று கற்பின் துரோபதைமுன் னானோர். 6 | தேன் விரிகின்ற மலர் மாலையை அணிந்த திண்ணிய தோள்களை யுடைய அறத்தின் மகனாகிய தருமனும், வீமனும், அருச்சுனனும், நகுல சகாதேவரும், குற்றமின்றி இவர்தம் மனையறத்தின் உரிமையை மேற்கொண்ட முறையால் ஒன்று பட்ட கற்பினையுடைய துரோபதை முதலானோர், துரோபதைக்குக் கொடுக்கப் பெற்ற அடைகளின் பொருளை எண்ணியும், வல்லார் வாய்க் கேட்டும் உணர்க. நகுல சகாதேவர் சேர்த்தெண்ணப்படுதல் நூலானறிக. சீரார் திருட்டத் துமனன் சிகண்டிமற்றும் ஏரார் கழற்கால் யதுமரபின் மன்னருடன் ஊரானாற் கன்பின் உரோமசர் முற்கலனார் பாரார் வியாதர் முதலாய பன்முனிவர். 7 | சிறப்பமைந்த திருட்டத்துமனன், சிகண்டி இருவருடனும் மேலும் அழகிய கழலணிந்த யது என்னும் மன்னன் வழி வந்த அரசருடனும் ஆன் ஊர்வாராகிய பெருமானுக்கு அன்பினை அமைத்த உரோமசர், முற்கலர், உலகிற் பரவிய புகழுடைய வியாசர் முதலானோர் ஆகிய முனிவர் பலருடனும், என்றினைய ரெல்லாம் இலிங்கந் தனித்தனியே நன்றிருத்தி ஏத்தி நயப்பாடு பெற்றாரால் அன்றவர்கள் போற்றும் இலிங்க மவைகண்டோர் மன்றின் நடமாடும் வள்ளல் அருள்பெறுவார். 8 | |