பக்கம் எண் :


528காஞ்சிப் புராணம்


     செருக்கு மிக்க தாருகன் என்னும் அசுரர் தலைவனைக் கொடிய
போர்க் களத்தில் வலியைக் கெடுத்து அரிய அவனை அழித்து வானவர்
தலைவனுக்கு இந்திர பதவியை வழங்கிய பின்பு போரை வென்ற
வேலைவலத்தில் உயர்த்திய தலைவராகிய முருகப் பெருமானார் வெள்ளிய
கயிலைப் பெருமலையை அடைந்து மணங்கமழும் கொன்றை மலர்
மாலையைச் சூடிய திருமுடியினையுடைய வள்ளலையும் இடப்பால் விளங்கும்
அன்னையையும் வணங்கி மகிழ்ந்து,

     அலகில் அண்டமும் அளித்து வளர்க்கும் அம்மை அப்பர்
தம் மடித்தலம் ஏறி, நிலவ ரும்புகனி வாய்எழில் காட்டி நெடிது
போதுவிளை யாடி அடுக்கற், குலம டப்பிடி கலன்பல பூட்டி விடுப்ப
மீண்டுகொடி நீள்கடை வாயில், வலமி குத்தகய மாமுகன் ஆவிமாட்டு
முன்இளவல் வைகுழி உற்றான்.                              3

     எண்ணில்லாத பெரும்புவனங்களைத் தலைஅளிசெய்து வளர்க்கும்
அம்மை அப்பர் தம் மடிமிசை யிருந்து புன்முறுவல் பூத்துக் கொவ்வைக்
கனியை ஒக்கும் மழலைச் சொல் லழகைத் தோற்றுவித்துப் பெரும்பொழுது
விளையாடல் புரிந்து, இமயமலையனது மகளாராகிய இளைய பிடியினை
ஒத்தவராகிய அம்மையார் முருகனுக்குப் பல அணிகளையும் பூட்டி
விடுத்திடப் பெயர்ந்து போய்க் கொடிகள் உயர்ந்த தலைவாயிலில்
பேராற்றலனாகிய கஜமுகாசுரனை அழித்த மூத்த பிள்ளையார் இருக்கையை
எய்தினார்.

     ஊங்கு வன்மடி மிசைக்கொடு பல்கால் உச்சி மோந்துகவுள்
முத்தமும் உண்டு, வீங்கும் அன்பொடு தழீஇக்களி கூர்ந்து விடைஅ
ளிப்பமுகம் ஆறுடை எங்கோன், யாங்கும் வைகுகண நாதர் இடந்தோ
றெய்தி ஆடலுறு வான்அது காலை, ஆங்கண் நான்முகவன் உம்பர்
குழாத்தோ டம்மை அப்பரை வணங்க அணைந்தான்.            4

     விநாயகப் பிரானார் ஆறுமுகங்களை யுடைய எமது பெருமானை
மடிமிசை இருத்திப் பன்முறையும் உச்சிமோந்து கன்னங்களில் முத்தங்
கொண்டு பெருகும் அன்பினால் மெய்யைத் தழுவிக் களிப்புமிக்கு விடுப்ப
ஆங்காங் குறையும் கணநாதர் இடந்தொறும் சென்று சென்று விளையாடி
இன்புறுத்தும் அப்பொழுது நான்முகன் அம்மை அப்பரை வணங்கத் தேவர்
குழுவொடும் அவ்விடத்தை அணைந்தனன்.

     ஆங்கவன், ஈங்கிவன் என்பன போன்ற ஊங்கு உவன் என்னும் சுட்டுப்
பெயர் ஒருசொல் நீர்மைத்தாய் மூத்த பிள்ளையாரை உணர்த்திற்று.