அத்தகைய திருக் கச்சி மயானச் சிவலிங்க வடிவில் அளவிடலாகாத பேரருட் பொலிவு தழைத்துப் பாம்பின் படமனைய அல்குலையும், சிவந்த வாயினையும் உடைய மலையரையன் மகளொடும் சடையிடைக் கங்கையைத் தரித்த பெருமானார் தம் திருவடிகளில் அன்பினை வைத்த அன்பர்களுக்குப் போகமும், பரபோகமும் வழங்கி விளங்கி வீற்றிருப்பர். சிவகங்கை வரலாறு நிகழ்பெரு வேள்வி முற்றி நிறைந்தநெய்க் குண்டந் தன்னைத் திகழ்சிவ கங்கைப் பேரால் தீர்த்தநா யகமாச் செய்து புகழ்அப விரத நன்னீர் ஆடினான் புரமூன் றட்ட இகழறு சீற்றத் துப்பின் ஈர்ந்துழாய்ப் பகழி வல்லான். 21 | புகழுறும் சினத்துடன் முப்புரங்களையும் அழித்த வலிமையையும் தேனால் ஈரிய துழாய் மாலையை அணிந்த திருமாலாகிய அம்பையும் உடைய பெருமானார் நிகழ்கின்ற வேள்வியினை முற்றுவித்து நெய் நிறைந்த குண்டத்தினை விளங்குகின்ற சிவகங்கை என்னும் பெயரால் தீர்த்தங்களுக் கெல்லாம் தலைமையாம் பதந் தந்து புகழ்ச்சியையுடைய அபவிரத நீராட்டை முடித்தனர். மறக்களிற் றடியின் ஏனை அடியெலாம் அடங்கு மாறும் உறக்கும்ஆல் வித்தின் உள்ளால் ஒடுங்கிய வாறும் போலத் திறப்படச் சிவ பிரான்செய் சிவகங்கைத் தடத்தின் அண்டப் புறத்தன அகத்த தீர்த்த மியாவையும் பொலிய வைகும். 22 | தறுகண்மையுடைய யானையின் அடியில் பிறவிலங்குகளின் அடிகள் அடங்குமாறு போலவும், செறிவுறும் ஆலமரம் விதையினுள் நுண்ணிதாய் ஒடுங்கிக் கிடக்குமாறு போலவும் பெருமானார் செம்மை பெற வகுத்த அச்சிவகங்கை தீர்த்தத்தில் அண்டத்தின் அகத்தும் புறத்தும் உள்ள தீர்த்தங்கள் யாவும் கூடிப் பொலிவுறும், அத்தடம் படிந்து மேனாள் அருந்தவ முனிவர் சில்லோர் வித்தக மயானத் தெம்மான் அருளினால் வினையின் நீங்கி முத்தியிற் கலந்தார் அன்ன முளரிநீர் இலஞ்சி மேன்மை சித்தமா சகன்றீர் யாரே இற்றெனத் தெரிய வல்லார். 23 | ஆணவ மலவலி அகலப் பெற்ற மாதவத்தீர்! முன்னாளில் அரியதவ முனிவரர் சிலர் அச்சிவ கங்கையில் மூழ்கிச் சமர்த்தனாகிய பண்டனை அழித்த சதுரப்பாடுடைய திருக்கச்சி மயானத் தெம் பெருமானை வழிபாடு செய்து திருவருளால் வினைகளினின்றும் நீங்கி வீடுபேற்றினை யடைந்தனர். அத் தகு தாமரைமலர்ப் பொய்கையின் பெருமையை இவ்வளவினது என்று யாவரே வரையறுத்துக் கூற வல்லவராவர்? கச்சி மயானப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-1901. |