பக்கம் எண் :


திருவேகம்பப் படலம் 565


     ஏனையபுல்லும், மரமும் முதலிய பூதகாரியப் பொருள்களாகிய உடம்பின்
வகைகளையும் திருமேனியில் உள்ள உரோமங்களிடமாகத் தோற்றுவித்துக்
கத்தூரி தோய்ந்த பொலிவுள்ள கூந்தலையுடைய அம்மையார் மாமரத்தின்
நீழலில் எழுந்தருளியுள்ள தூயகங்கை தங்கிய சடைமுடி வள்ளலை
மெய்யன்பொடுந் தொழுதனர்.

தொழுத நங்கையைத் தூமடித் தலமிசைக் கொண்டு
முழுது மாகிய முன்னவன் மாந்தரு நிழற்கீழ்
விழும ணித்தவி சும்பரின் விளங்கிவீற் றிருந்தான்
கழுமல்நீங்கிஎவ் வுயிர்களுங் களிப்பொடு வளர்ந்த. 16

     வணங்கிய அம்மையைத் தூய மடித்தலத்தில் இருத்திக் கொண்டு
எல்லாப்பொருள்களுமாகிய உலகத்திற்கு முன்னுள்ளோர் மாமரத்தின்
நீழலில் சிறந்த மணி ஆசனத்தின்மேல் விளங்கி வீற்றிருந்தனர். இவர்
இங்ஙனமாகலின், எல்லாவுயிர்களும் துன்பம் நீங்கி மகிழ்ச்சியொடும்
வளர்ந்தன.

மூவர் வரம்பெறல்

அந்த ணாளன்முன் மூவரும் இலளிதை யவள்பால்
வந்த மாத்திரை யேதுயின் றெழுந்தவர் மான
முந்தை வாலறி வெய்தினார் முதல்விதன் பதமும்
எந்தை பாதமுந் தொழுதெழுந் திறைஞ்சிஏத் தெடுப்பார்.  17

     பிரமன் முதலாகிய கடவுளர் மூவரும் இலளிதாதேவியினிடத்துத்
தோற்றிய அந்நிலையே உறங்கி விழித்தவரை ஒப்ப வேள்வியில் அவியாக
இடு முன்னர் விளங்கிய தூய அறிவினைஉடையராய் அம்மை அப்பர்
திருவடிகளை வணங்கித் துதிசெய்தனர்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

தரங்கவெண் புணரி கான்ற தழல்விடம் பருகி எம்மை
இரங்கிஅன் றளித்தாய் மற்றும் இன்றொரு பண்டன் றன்னால்
உரங்கெழும் அடியேம் ஆவி முழுவதும் உய்யக் கொண்டு
வரங்கிளர் கருணை கூர்ந்த வள்ளலே போற்றிபோற்றி.    18

     அலைகளையுடைய திருப்பாற்கடல் உமிழ்ந்த வடவானலத்தை ஒக்கும்
விடத்தைப்பருகி அந்நாள் எங்களை அருள்செய்து காத்தனை. மேலும்,
இந்நாள் ஓர் பண்டாசுரனால் நேர்ந்ததுன்பம் நீக்கி வலியுடைய அடிமையேம்
உயிர்கள் அனைத்தினையும் பிழைக்குமா றுட்கொண்டு மேன்மைமிகுந்த
அருள் மீக்கூர்ந்த வள்ளலே வணக்கம்.

சைவச்செந் தழலின் யாங்கள் ஆகுதிச் சமிதை யாகச்
செய்வித்து வேள்வி யாற்றுஞ் சிவபிரான் அருளி னாலே
உய்வித்து மீள எம்மை உதவிய கருணை நாட்டத்
தெய்வப்பூங் கொம்ப ரன்ன செல்விநின் சரணம் போற்றி.  19