பக்கம் எண் :


566காஞ்சிப் புராணம்


     யாங்கள், செவ்விய சிவாக்கினியில் இடும் அவிப்பொருள்களாம் ஓம
விறகாம்படி செய்வித்து வேள்வியைப் புரிந்த சிவபெருமான் திருவருளால்
உய்யக்கொண்டு மீளவும் முன்போல எம்மைப் படைத்துதவிய அருள்
நோக்குடைய தெய்வத்தன்மை அமைந்த பூங்கொம்பினை ஒத்த செல்வீ!
நின்திருவடிகளுக்கு வணக்கம்.

அம்மையாய் அப்ப னாகிக் குருவுமாய்த் தெய்வ மாகிச்
சும்மைநீர்க் காஞ்சி வைப்பின் இருவகை உருவு தோற்றி
எம்மையும் ஆண்டு கொண்ட இருமுது குரவீர் அன்பர்
வெம்மனச் சுரும்பு வீழும் விரைமலர்ப் பாதம் போற்றி.    20

     ‘‘அம்மையும், அப்பனும், குருவும், தெய்வமும் ஆகி ஒலியுடைய நீர்ப்
பொய்கைகள் நிரம்பிய காஞ்சித்தலத்திடை நாயகன் நாயகி வடிவு புலப்படக்
காட்டி ஒன்றுக்கும் போதாத எம்மையும் ஆட்கொண்ட தாய்தந்தையீர்!
அன்பர்தம் விருப்புடைய மனங்களாகிய வண்டுகள் விரும்பும் மணம்கமழும்
மலரை ஒக்கும் திருவடிகளுக்கு வணக்கம்.”

மைந்தர்கள் குழறிப் பேசு மழலைமென் கிளவி வேட்கும்
தந்தையுந் தாயு மென்னத் தமியரேம் புகழ்ச்சி கொண்டு
புந்திமிக் குவகை பூப்பத் திருவருள் புரியீர் என்று
நைந்திரு விழிநீர் சோர நயந்திருந் துதிகள் செய்தார்.     21

     ‘‘மைந்தர்கள் குழறிப்பேசும் மெல்லிய குதலைச் சொற்களை விரும்பும்
தந்தைதாயரைப்போல வெளிற்றறிவுடையோம் போற்றிய புகழ்ச்சியையும்
பொருளாகக் கொண்டு உள்ளத்தில் பெருமகிழ்ச்சி பொலியத்திருவருளைப்
புரிவீராக” என்று உள்ளம் நெகிழ்ந்து விழிகள் அன்புநீர் வார விரும்பித்
துதிகள் பல பாடினர்.

     இறைவனையும் இறைவியையும் முன்னும், பின்னும் ஒருங்கேயும்
இடையில் தனித்தனியாகவும் போற்றி செய்தனர்.

மடங்கருங் காதல் மேன்மேல் வளர்ந்தெழக் குடந்தம்பட்ட
முடங்குகால் ஞிமிறு பாயும் முண்டகத் திறையை மாலை
அடங்கமூ வுலகும் நீற்றும் அண்ணலை அருளின் நோக்கி
விடங்கனி மிடற்றுப் புத்தேள் வேட்டதென் உரைமின் என்றான். 22

     அடங்காத பேரன்பு மேலும் மேலும் முறுகி எழ வணங்கிய,
வளைந்த காலையுடைய வண்டினங்கள் பாய்ந்துழக்கும் தாமரைமலரை
இருக்கையாகவுடைய பிரமனையும் திருமாலையும் மூவுலகையும் ஒருங்கே
நீறாக்கும் உருத்திரமூர்த்தியையும் அருளொடும் பார்த்து விடம் பழுத்த
திருக்கழுத்தினையுடைய பெருமானார் ‘‘நீவிர் விரும்பிய யாவை கூறுமின்’’
என்றருளினர்.