பக்கம் எண் :


திருவேகம்பப் படலம் 583


     ‘இவ்வேத விதிவழி எம்மைப் பூசனை புரிமின்’ என அருளிய பாம்பை
அணிந்த பரமேட்டியின் ஆணைப்படி அம் மும்மூர்த்திகளும் இன்பக்
கடலில் மூழ்கிக் காமக் கண்ணி அம்மையை மணந்த பெருமான்
திருவடிகளைப் பூசனை செய்வர்.

இலளிதை முதலியோர் இறைவனை வழிபடல்

கலி விருத்தம்

சயமுறு காரணத் தலைவர் மூவரைக்
கயல்விழித் தோற்றிய காமக் கண்ணியாம்
பெரியய இலளிதைப் பிராட்டி வானளாய்
உயரிய மாமுதல் ஒளியைப் பூசித்தாள்.           82

     வெற்றிமிகும் தலைவர் மூவரையும் முக்கண்களில் வருவித்த காமாட்சி
அம்மையாம் பெயர் பூண்ட இலளிதா தேவியார் வானில் தோயுமாறு ஓங்கிய
மாவினது மூலத்தில் பெருஞ்சுடர் மூர்த்தியைப் பூசித்தனர்.

மற்றதற் கணியதென் மருங்கின் அப்பெயர்
பற்றிய சிவக்குறி நிறுவிப் பாயிதழ்
பொற்றசெந் தாமரைப் புனிதன் பூசனை
தெற்றெனச் செய்தனன் தெளிந்த சிந்தையான்.    83

     அதற்கு அடுத்துத் தென்திசையில் கம்பர் எனப் பெயரிய சிவலிங்கம்
தாபித்து அழகிய செந்தாமரை மலரில் இருக்கும் பிரமன் தெளிந்த
சிந்தையனாய் விரைந்து பூசனை புரிந்தனன்.

பன்னரு மாமுதல் வாம பாகத்தின்
அன்னண மணியணி அகன்ற மார்பினான்
மன்னிய உலகெலாம் மயக்கும் ஆசையின்
பொன்னவிர் மலர்கொடு பூசை ஆற்றினான்.      84

     பேசற்கரிய மாவடி முதல்வனை நிலைப்பெறும் பல்லுயிர்களையும்
மயக்கும் ஆற்றலைப் பெறுவான். அழகிய மார்பினில் கௌத்துவ மணியை
அணிந்த திருமால் பொன்னைப் போல ஒளிரும் மலராற் பூசனைப் புரிந்தனர்.

பேதமில் பாவனை பிறங்கத் தாணுவம்
காதலிற் பூசைமுன் இயற்றிக் கண்ணுதல்
மேதகை அடிகளோ டொருமை மேயினான்
ஆதலின் இருவர்க்கும் இல்லை வேற்றுமை.       85

     வேற்றுமையற்ற பாவனை தோன்ற உருத்திர மூர்த்தியும்
மெய்யன்பொடும் பூசனை செய்து கண்ணுதற் பெருமானொடு ஒன்றாந்
தன்மை எய்தினர். ஆதலின், உருத்திரர் இருவர்க்கும் வேற்றுமை இன்று
ஒற்றுமை உற்றது.