பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 611


     மற்றோர், முறையாகவும், சொல்லக் கேட்பாயாக, கம் என்னும் சிரசில்
சயனமுறுவது கேசம். கம் என்னும் சிரசில் அஞ்சித்தல் காஞ்சி. ஆகலின்,
கேசம் காஞ்சி என்பன ஒருபொருளைக் குறிப்பன. ஆகவே, கேசாந்தம்
எனினும் காஞ்சியந்தம் எனினும் ஒன்றே.

     என்றும்நமக் கினியதனால் முதன்மையால் தானங்கட் கெல்லாம்
சென்னி, என்றியம்பப் படுங்காஞ்சி இத்திறத்துக் கேசாந்தப் பெயர்சால்
வைப்பின், ஒன்றுணரா மடவோர்கள் விலங்குமரம் முதல்அனைத்தும்
உயிர்போங் காலை, மன்றமிசைத் தலைஓடு கீறிஉடல் விடுத்தேகும்
மலர்ப்பூங் கோதாய்.                                     71

     என்றும் நமக்கினிமையும், முதன்மையும் உடைமையால் தலங்களுக்
கெல்லாம் சென்னி என்று சொல்லப்பெறும் காஞ்சி, மேற்கூறிய கேசாந்தப்
பெயர் அமையும் தலத்தில் சிறிதும் அறிவில்லோரும், விலங்குகளும், மர
முதலாம் பிறவும் உயிர் நீங்குங் காலத்து நிச்சயமாகக் கேசாந்த முத்தியை
எய்தும் ஏலவார்குழலி! 

     ஆதலின் அங் கிறந்தவர்கட் குடல்வேங்கால் சிரம்அனலில்
வெடியா தின்றும், வேதமெலாம் எடுத்தியம்பும் அந்நகரின்
பெருமைஎவர் விளம்பற் பாலார், ஏதமற அங்கெய்திக் கழுவாய்நீ
இயற்றுதிமுன் இடப ஏறும், கோதகலக் கழுவாய்அங் காற்றியது
கோதாய்என் றருளிச் செய்தார்.                            72

     ஆகலின், அக்காஞ்சியில் இறப்பவர் உடல் நெருப்பில் வேகுங் காலை
இன்றும் தலை வெடித்தல் இல்லை. வேதங்கள் எடுத்துப் போற்றும் அந்
நகரத்தின் பெருமையை எடுத்தியம்ப வல்லவர் ஒருவரும் இலர். அங்குச்
சென்று பிழை தீரக் கழுவாயாகப் பூசனை புரிதி. முன்னம் இடபமும் குற்றம்
நீங்கப் பிராயச்சித்தம் அவண் புரிந்தது’ என்றருளினர்.

இடபேச்சர வரலாறு

கலிநிலைத் துறை

அருளுந்திரு வாய்மொழி கேட்டலும் அங்கை கூப்பிப்
பெருவெள்விடை யாதது செய்பிழை என்னை தீரப்
புரியுங்கழு வாய்எவ னோபுகல் கிற்றி என்றாட்
கிருள்கண்டன வல்விடம் ஏந்திய கண்டர் சொல்வார்.   73

     அவ்வளவிலே, அஞ்சலி செய்து ‘இடபம் யாது? அது புரிந்த பிழை
என்னை? புரிந்த பிராயச்சித்தம் யாதோ? அவற்றை விளக்க வேண்டும்’ என
வினவிய அம்மையார்க்குக் கொடிய விடத்தைத் திருக் கழுத்தில் நிறுத்திய
பிரானார் கூறுவார்.

முன்னோர்கடை நாள்முள ரிக்கண் முகிழ்த்த புத்தேள்
முன்னாஞ்சகம் முற்றும்நம் மான்முடி வுற்ற தாகப்
பொன்னேர் சுணங்கின் பொலம்பூண்முலைப் பூவை யன்னாய்
அந்நாள் அறத்தெய்வதம் அத்திறம் உற்று நோக்கி.     74