பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 625


முறையி னால்அ டுக்க நண்ணும் மொய்கு ழாத்தை நோக்குவார்
இறைவி யென்று சின்னம் எங்கும் ஏங்கும் ஓசை கேட்குவார்
நிறைம கிழ்ச்சி யிற்கி ளர்ந்து நீடும் இன்ப வெள்ளநீர்த்
துறைப டிந்து கண்கள் நீர்து ளிப்ப நின்று போற்றுவார்.    125

     ஒளியும், ஒலியும் மணியுதிர்வும் ஆகிய வரிசையோடும் அடுத்து
நெருங்கும் செறிந்த குழுவினைக் காண்பார். இறைவி என்றும் தனை ஒத்த
பிற பெருமைகளையும் சின்னங்கள் எவ்விடத்தும் ஒலிக்கும் முழக்கத்தைக்
கேட்பார். குறைவின்றி நிறைந்த களிப்பின் மிக்குப் பெருகும் இன்பக்கடலிற்
படிந்து கண்கள் நீர்வார நின்று போற்றுவார்.

எம்பி ரான்ற னிப்ப அம்மை இங்கு வந்த தென்னெனக்
கம்ப வாணர் பூசை செய்க ருத்தின் வந்த தாமென
நம்பி னேங்கள் வீடு பேறு நண்ணு காலம் ஈதென
இம்பர் ஞாலம் எத்த வம்ப டைத்த தென்ன விள்ளுவார்.   126

     எம்பிரான் தனித்திருக்குமாறு அம்மையார் இங்கெழுந் தருளிய
தென்னை எனவும், திருவேகம்ப நாதரைப் பூசனை புரியும் திருவுள்ளத்துடன்
போந்தருளிய தெனவும், விரும்பினோமாகிய அடியோங்கள் முத்தியை
எய்தும் பருவம் இதுவாகும் எனவும், இந்நிலவுலகம் எத்தவத்தை முன்னம்
இயற்றியதோ எனவும் இவ்வாறு வினவவும் விடையிறுப்பவும் பலப்பல
கூறுவார்.

மண்ண கத்து வைகும் மாந்தர் இன்ன ராக மாணிழைப்
பெண்ணின் நல்ல வள்வி மான நின்றும் இப் பெரும்புவிப்
புண்ணி யத்த லங்கள் தோறி ழிந்தி ழிந்து போர்விடை
அண்ண லார்இ லிங்க பூசை செய்து காசி அண்மினாள்.  127

     மண்ணிடை வாழும் மக்கள் இத்தன்மையராக மாட்சிமை பொருந்திய
அணிகளைப் பூண்ட பெண்ணின் நல்லாளாகிய பெருமாட்டி யார் இப்பெரிய
பூமியில் தெய்வத்தலங்கள் தோறும் விமானத்தினின்றும் இழிந்திழிந்து
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்தியைச் சிவலிங்க பூசனை புரிந்து
காசியை அணுகினார்.

முச்ச கம்பு கழ்ந்து போற்று மொய்கொள் காசி மாநகர்
விச்சு வேசர் பூசை யாற்றி வேறி லிங்கம் ஒன்றமைத்
தர்ச்ச னைத்தி றத்தின் ஏத்தி வைகி அங்க கன்றுசீர்க்
கச்சி யம்ப திக்கண் வைத்த காதல் உய்ப்ப ஏகினாள்.  128

     மூவுலகினும் புகழ்ந்து துதி செய்யும் வலியுடைய காசியில்
விசுவநாதரைப் பூசனை புரிந்து, மேலும், வேறாகத் தாமோர் சிவலிங்கம்
நிறுவிப் பூசனை வகையிற் றுதிசெய்து சிறப்பினையுடைய கச்சியம்பதியில்
வைத்த பெருவிருப்பம் உந்த அங்க ணின்றும் புறப்பட்டனர்.           

     79