பக்கம் எண் :


626காஞ்சிப் புராணம்


அங்கண் அங்கண் எந்தை யார்அ மர்ந்து வாழ்இ டந்தொறும்
பொங்கு கின்ற காத லோடு பூசை செய்து செய்துபோய்
மங்க லத்த மிழ்ப்பு விக்கு வாண்மு கமெ னத்தகும்
துங்க மிக்க கீர்த்தி பெற்ற தொண்டை நாட்டை நண்ணினாள்.  129

     ஆங்காங்கு எமது பெருமானார் விரும்பியுறையும் தலங்கள் தோறும்
அடங்காது எழுகின்ற பெருவிருப்போடும் வழிபாடு செய்து, நலமுறும் தமிழ்
நாடென்னும் மங்கைக்கு ஒளிபொருந்திய முகமென்று கூறத்தகும் உயர்ச்சி
மிகுந்த புகழ்பெற்ற தொண்டை நாட்டினைச் சென்றணுகினர்.

அம்மையார் காஞ்சியை அடைந்த நாள்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

அண்ணலந் துலைசேர் என்றுழ் ஐப்பசித் திங்கட் பூரம்
வெண்மதி யாட்சி மூன்றாம் பின்பக்கம் நந்தை மேய
புண்ணியத் திருநாள் எல்லாப் புவனமும் பெருவாழ் வெய்த
விண்ணவர் பிராட்டி காஞ்சி வியனகர் எல்லை சேர்ந்தாள். 130

     பெருமை பொருந்திய துலாராசியைச் சூரியன் சேர்ந்த ஐப்பசி மாதத்துச்
சந்திரன் மருவிய பூர நன்னாளும், தேய்பிறையும் மூன்றாம் முறையாக வந்த
நந்தை என்னும் பெயர் பெறும் ஏகாதசியும் கூடிய புண்ணிய நன்னாளில்
எல்லாவுகங்களும் பெரிய வாழ்வினையடையுமாறு விண்ணவர் பெருமாட்டியார்
காஞ்சி என்னும் பெரிய நகரின் எல்லையைச் சேர்ந்தனர்.

பார்த்தனன் கடைநாள் செல்லாப் பழம்பதி மகிழ்ச்சி மேன்மேற்
கூர்த்தனள் சிரமேற் செங்கை குவித்தனள் புளகம் மேனி
போர்த்தனள் விழிநீர் மாரி பொழிந்தனள் அங்கோர் வாவித்
தீர்த்தநீர் குடைந்து மூழ்கிச் சங்கற்பஞ் செய்து முற்றி.       131

     ஊழி நாளின் செய்கையாகிய அழிவு புகாத பழம் பதியைப் பார்த்தனர்;
முன்னையினும் மகிழ்ச்சி மீக்கூர்ந்தனர்; சென்னிமேற் செங்கைகளைக்
கூப்பினர், திருமேனி (மயிர்க்கூச்செறிந்தனர்;) புளகம் போர்த்தனர்; கண்
மழை பொழிந்தனர்; அங்கொரு தீர்த்தத்தில் படிந்து மூழ்கிச் சங்கற்பம்
செய்து முற்றி,

கங்கண தீர்த்தம் கங்கணேச்சரம்

அலங்கொளிக் கரத்துச் செம்பொற் காப்புநாண் அணிந்து மூவா
இலிங்கம்ஆண் டிருவிப் பூசை இயற்றினாள் அனைய தீர்த்தம்
நலங்கெழு காப்புத் தீர்த்த மெனப்பெயர் நவில்வர் சேர்ந்தார்
குலங்களோ டுய்யச் செய்யும் இலிங்கமுங் கொள்ளும் அப்பேர். 132

     பேரொளி விளங்கும் திருக்கை யிறையில் செம்பொற் காப்புக் கயிற்றை
அணிந்து மாறுபடாத சிவலிங்கத்தை அங்குத் தாபித்துப் பூசனையைப்
புரிந்தனர். அத்தீர்த்தத்தினை நன்மை கெழுமிய காப்புத்