பக்கம் எண் :


630காஞ்சிப் புராணம்


     மறுகெங் கணும்விரை கமழும் படிகுளிர் பனிநீர் விடுவர்கள்
மறைஓதி, நிறுவுந் தவநிலை முனிவோர் கரமிசை நிரைபொற்குடமுடன்
எதிர்கொள்வார், சிறுநுண் ணிடைமறை மடவார் வாழ்த்திசை திகழ்மங்
கலமொழி உரைசெய்வார், நறவம் பயில் குழல் அரமங் கையரொடு
நரமங் கையர்நட மிடுவாரால்.                             144

     வீதிகளின் எவ்விடத்தும் மணம் வீசும்படி குளிர்ந்த பனிநீரைத்
தெளிப்பார்; வேதங்களை ஓதி அந்நெறியில் நிறுத்தும் தவ இயல்பினை
உடைய முனிவரர் கைகளில் பூரண பொற்குடங்கள் ஏந்தி வரவேற்பார்,
மிகச் சிறிய இடையினையுடைய வேதியர் மகளிர் வாழ்த்துதலும், மங்கல
கீதம் பாடலும் ஆக எதிர் வருவார். தேனூறும் கூந்தலையுடைய தேவ
மகளிருடன் மண்ணுலக மகளிரும் கூடி நிருத்தம் செய்வார்.

     பொங்கும் பெருகெழில் புனையுந் திருநகர் புரிவின்
வலம்வருமுறையானே, தங்குங் கலைமகள் மலர்மா திமையவர் மடவார்
காளிகள் சாத்தன்சீர், எங்கும் பரவிய திறல்யோ கினிகளை எழுமா
தர்களை இடந்தோறும், அங்கங் கிருவினள் என்நெஞ் சிருவிய
அம்பொற் றிருவடி பிறர்காணாள்.                          145

     முன்னையின் மிக்கு வளரும் அழகை மேலும் புதுக்கும் திருநகரை
இடையறாத விருப்பொடும் வலம்வரு முறையுடனே, நிலைபெறும் கலை
மகளும் நிலைபெறும் செல்வ மகளும் ஆகிய இவரையும், தேவ மகளிரையும்,
காளிகளையும், சாத்தனாரையும் எங்கும் பரவிய வலியுடைய யோகினிகளையும்,
சப்த மாதர்களையும் அவரவர்க்குத் தக்க இடங்களில் இருத்தினர்
என்னுள்ளத்தில் இருத்திய அழகிய பொன்னொக்கும் திருவடிகள் பிறரால்
காணப்படாதவர்.

     குணபால் முதல்நதி முடியார் இனிதமர் கோயில் முழுவதும்
முறையிற்சென், றிணரார் மலர்கொடு வழிபட் டருளொடும் எனை
ஆளுடையவள் எய்துற்றாள், உணரா தரிஅயன் முதலோர் அலமரும்
ஒருபே ரொளிமரு மலர்தூவும், மணமா நிழலிடை வெளியே எளிவர
மாகம் புவிதொழும் ஏகம்பம்.                             146

     கங்காதரர் இனிது வீற்றிருக்கின்ற திருக்கோயில் திருக்கச்சிநெறிக்
காரைக்காடு முதலாக எல்லாத் தலங்களையும் எய்திப் பூங்கொத்துக்களில்
அலர்ந்த மலர்களைக் கொண்டு முறைப்படி அருச்சனை செய்து அருளுடன்
என்னையும் ஆளாகக் கொண்ட அம்மையார், திருமால் பிரமன் முதலானோர்
உணராது வருந்துதற் கேதுவாகிய ஒப்பற்ற பெரிய ஒளி, மணமுடைய
மலர்களைச் சொரியும் மங்கல மாமர நிழலில் வெளிப்பட எளிதில் தோன்ற
வானவரும் மண்ணவரும் அவ்வொளியைத் தொழும் இடனாகிய ஏகம்பத்தை
எய்தினர்.

     ஏணிற் பொலிமலை அரசன் தருமயில் உள்ளங் களிவர
எம்மானார், ஆணைப் படிமன நினைவிற் கடவுளர் யவனன் புரியும்