என்றிது வியாழப் புத்தேட் கியம்பினான் இயம்பிப் பின்னும் தன்றிரு வுளத்தின் எண்ணிச் சயிலவீ றடக்க யானே மன்றலம் பொழில்சூழ் காசி வரைப்பினைக் குறுகி அந்த மின்றிகழ் சடையாற் கோதி விடுப்பல்என் றெழுந்து சென்றான். 206 | என்றிதனை அக்குருவிற்குக் கூறி, மேலும் தான் சிந்தித்து மலையின் செருக்கினை அடக்கவேண்டி ‘யானே மணங்கமழும் சோலை சூழும் காசியை நெருங்கி அந்த மின்னொக்கும் சடை முனிவர்க்குக் கூறிச் செல்ல விடுவேன்.’ என்று எழுந்து சென்றனன் பிரமன். பொன்னவ னாதி தேவர் புடையுறப் போந்து செங்கால் அன்னமுங் கருமென் கூந்தல் அன்னமும் மறலி ஆடும் கன்னிவெண் டரங்கத் தெண்ணீர்க் கங்கையா றுடுத்த காசி நன்னெடு நகரம் புக்கான் நகைமலர்க் கமலத் தோன்றல். 207 | கமல மலரினன் குரு முதலானோர் உடன் வரச்சென்று சிவந்த கால்களையுடைய அன்னப் பறவைகளும் கரிய மெல்லிய கூந்தலையுடைய அன்னம் போல்வாரும் மாறுபட்டுத் துளைதற்கிடனாகி வெள்ளி அலைகளை யுடைய தெளிந்த நீரினையுடைய கங்கைக் குமரிபுடை சூழ்ந்த காசியாகிய நல்ல நெடிய நகரிற் புக்கனன். பிரமன் அகத்தியர்க் குரைத்தல் அவ்வயின் அகில நாதர் அடியிணை தொழுது போற்றித் தெவ்வலி அடுபோ ராண்மைத் தேவர்தங் குழாத்தி னோடும் எவ்வமில் கேள்வி சான்ற குறுமுனி இருக்கை நண்ணிப் பௌவநீர் பருகி னானைக் கண்டிது பகர லுற்றான். 208 | அவ்விடத்தே விசுவநாதர் திருவடிகளை வணங்கி ஏத்திப் பின்பு துன்பம் இல்லையாதற்குக் காரணமாகிய மறைநூல்கள் நிரம்பிய அகத்தியர் தவச் சூழலைப் பகைவரை அழிக்கின்ற போராற்றலையுடைய தேவரொடும் அணுகிக் கடல்நீரைக் குடித்த அகத்தியரைக் கண்டு தம் வருகைக்குக் காரணத்தைக் கூறத் தொடங்கினர். முக்குறும் பெறிந்த காட்சி முனிவர்ஏ றனையாய் சால மிக்குயர் விந்த நாகந் தருக்குமீக் கொண்டு நாளும் பொக்கமில் இரவி திங்கள் புகுநெறி தடைசெய் தன்றால் அக்கிரி இறுமாப் பெல்லாம் அகற்றுவான் நீயே வல்லை 209 | காமம், வெகுளி, மயக்கம், என்னும் மூன்றன் கொடுமையை அழித்தற்கு ஏதுவாகிய மெய்யறி வினையுடைய முனிவரசே! மேலிட்டு நாடொறும் பொய்படாது வெளிப்படும் சூரிய சந்திரர் செல்லும் வழியைத் தடை செய்தது விந்தம். அம்மலையினது இறுமாப்பினை முற்றவும் நீவிரே அகற்ற வல்லீர். |