பக்கம் எண் :


தழுவக் குழைந்த படலம் 645


தேவர்கள் துன்புறுதல்

அங்கது நோக்கி வல்லை புரந்தர னாதி விண்ணோர்
தங்குலக் குரவ னோடுஞ் சதுமுகன் இருக்கை சார்ந்தார்
பங்கயக் கிழவன் நோன்தாள் பணிந்தனர் பரசிப் போற்றி
எங்களை வெருவா வண்ணம் புரத்திஎன் றிதனைச் சொற்றார்.   202

     அதனைக் கண்டு இந்திரன் முதலான விண்ணுலகோர் தம் குல
குருவாகிய பிருகற்பதியோடும் நான்முகன் இருக்கையை விரைந்து சேர்ந்தனர்.
அப்பிரமனார் தவத்தாள்களைப் பணிந்து துதிசெய்து தங்களை அபயம் தந்து
காத்தல் வேண்டும் என்று இதனைக் கூறினார்.

இருசுடர் வழங்கும் ஆற்றை இறும்புசூழ் சோலை விந்தப்
பருவரை தடுத்த வாற்றால் பகல் இராத் தொடக்கம் இன்றித்
திருநெறி வேள்வி மாறித் தெருமந்த துலுகம் மன்னோ
மருமலர்க் கமல வாழ்க்கை வயங்கெழு கடவு ளேறே.     203

     சந்திர சூரியர் செல்லும் வழியை குறுங்காடும் பெருங்காடும் சூழ்ந்த
விந்தமலை தடுத்தமையால் பகல் இரவு முதலிய காலவேறுபாடு களின்றிச்
சிவாகம வேள்விகள் இல்லையாகி உலகோர் வருந்துகின்றனர் பெரிதும்.
மணங்கமழும் மலரி லுறையும் வன்மையமைந்த கடவுளர் தலைவவோ!

இனிஎமக் குறுதி என்னே என்றலும் இளவண் டூதும்
பனிமலர்க் கதுப்பின் ஐம்பாற் பாரதி கொழுநன் கேளாத்
தனிமிடல் படைத்த விந்தத் தருக்கினைப் பௌவம் உண்ட
முனிவரன் அடக்க வல்லும் என்றுள முன்னிச் சொல்வான்.  204

     இப்பொழுது எமக்கு வரக்கடவது யாதோ? என முறையிடலும்,
மழலை வண்டுகள் ஒலிக்கும் குளிர்ந்த மலரையணிந்த ஐம்பகுதியாக
முடிக்கப்பெறும் கூந்தலையுடைய சரசுவதி நாயகன் செவியேற்று மிக்க
வலிபடைத்த விந்தமலையின் செருக்கினைக் கடல் நீரைப் பருகிய
அகத்தியரே அடக்கவல்லவர் என்றுள்ளத்தில் எண்ணிக் கூறுவர்.

நடலைஇன் றுயர்ந்தோய் கேட்டி காசிமா நகரம் வைகுங்
குடமுனி தன்னை விண்ணோர் குழாத்தொடும் நணுகி விந்தத்
தடவரைத் தருக்கு நீப்பான் வேண்டுக தவத்தான் மிக்கோன்
கடலெலாங் குடங்கை ஏற்றுப் பருகினான் முன்னங் கண்டாய்.  205

     ‘துன்பம் இன்றி உயர்ந்த பிருகற்பதியே! கேள். காசியில் எழுந்தருளும்
அகத்திய முனிவரைத் தேவர் குழுவுடன் சென்று கூடி விந்தமலையின்
இறுமாப்பினைப் போக்குமாறு அவரை வேண்டுக. தவத்தினால் உயர்ந்த
அவர் கடல் நீரை முற்றவும் உள்ளங்கையில் முன்னர் அடக்கிப் பருகினார்.
அதனை எண்ணுதி.