விளங்க அணிந்து செயத்தக்க தொண்டுகள் பலவற்றையும் செய்து மாவடியில் முளைத்த பரஞ்சுடரை வழுவாது தொழுது வாழ்வார். கலி விருத்தம் வற்றரு மறைஅவ்வா றோதி வாழ்க்கையிற் பற்றில னாயிடிற் குரவன் பால்என்றும் உற்றினி துறைகபற் றுடைய னேயெனில் பெற்றியின் அருட்குரு இசைவு பெற்றரோ. 15 | தழைத்த மறைகளை மேலே கூறியவாறு கற்று இல்லற வாழ்வில் விருப்பிலன் ஆயின் ஆசாரியனிடத்துத் தங்கி வாழ்க. விருப்புடையன் ஆயின் உரிய முறையின் அருட்குருவின் சம்மதத்தைப் பெற்று, கடவுளர் பிதிரர்தங் கடன்கள் நீக்குவான் வடுவறும் இலக்கணம் மாண்ட கற்பினின் மிடலுடைக் கிழத்தியை விதியின் வேட்டுப்பின் நெடுமனை வாழ்க்கையின் ஒழுகல் நீதியே. 16 | தேவர், தென்புலத்தார் தம் கடன்களை முடித்தற் பொருட்டுக் குற்றமற்ற இலக்கணத்தால் மாட்சிமையுடைய கற்பினால் திண்ணிய உரிமையை விதிப்படி திருமணம் புரிந்துகொண்டு மனை அறத்தில் ஒழுகுதல் முறையே. கருதுமுப் பதிற்றிரு கவள மென்பதம் இருபொழு துண்டலும் எச்சம் ஐவகை புரிதலும் விதித்தநாள் மனைவி பூண்முலை மருவலும் இனையவும் இவர்க்கு மாணுமே. 17 | ஒரு வேளைக்கு முப்பத்திரண்டு கவளமாக இருவேளை உணவு கொள்ளலும், ஐவகை வேள்வியை யியற்றலும், விதித்த நாட்களில் மனைவியொடு கலத்தலும் ஆகிய இவை இவர்க்குச் சிறக்கும். ஓதெரி சமிதையின் ஓம்பல் தெய்வமாம் ஏதமில் பிதிரருக் கீதல் அன்னதாம் பூதருக் கிடுபலி பூத எச்சமே வேதியர்க் கோதனம் வீசல் மானிடம். 18 | விதித்த சமித்துக்களைக் கொண்டு வேள்வி செய்தல் தேவயாகம். துன்பில்லாத தென்புலத்தார்க்குத் தருப்பணம் செய்தல் பிதிர்யாகம், பலியிடல் பூதயாகம், பிராமணர்க்குச் சோறு வழங்கல் மானுட யாகம், |