அந்தணர் இருக்கை பூசுரப் பெயரின் இருமொழிப் பொருட்கும் உரிமைபூண்டுறு நிலைக் கேற்பக், காசினி வரைப்பின் நாள்தொறும் வழாது கமழ்சுவை அடிசிலான் அதிதி, பூசையும் வேள்வி அவியினாற் கடவுள் பூசையும் ஒருங்குசெய் கடப்பா, டாசற ஆற்றும் பார்ப்பன வாகை அறிஞர்வாழ் இடம்பல அவண. 103 பூசுரர் எனப் பகுபதமாய இருமொழியின் பொருளுக்கும் உரியராய் நின்ற நிலைக்குத் தக நிலவுலகின் நாடொறும் வழுவாமல் நறுமணம் கமழும் சுவை மிக்க உணவான் அதிதி (விருந்தினர்) பூசையும், வேள்வியிலிடும் அவியால் தேவ பூசனையும் ஒருங்கு செய்யும் கடப்பாட்டினைக் குற்றமறச் செய்து முடிக்கும் பார்ப்பன வாகையை மேற்கொண்ட அறிஞர் வாழும் இடங்கள் பல அவ்விடத்துள்ளன. மானுடயாகம் என்னும் விருந்தும், தேவயாகம் என்னும் வேள்வியும் சிறக்க முடித்து வாகை சூடியோர் என்க. அரசர் இருக்கை தகைபெறு வலியால் தெம்முனை முருக்கிக் காவற்சா காடுகைத் தெங்கும், திகிரிஒன் றுருட்டி முறையுளி செங்கோல் செலுத்துநர் கள்வர்மற் றுயிர்கள், பகைவர்தாம் தமர்என் றிவ்வயின் எய்தும் பயந்தடுத் துலகெலாம் புரக்கும், மிகுபுகழ் படைத்த அரசியல் வாழ்க்கை வீரர்வாழ் இடம்பல அவண. 104 தகுதி பெற்ற வலிமையால் பகைவர் போர்க்களத்தை அழித்துக் காத்தலாகிய சகடத்தைச் செலுத்தி எவ்விடத்தும் ஆணையாகிய சக்கரத்தை ஒன்றாக்கி முறையொடு செலுத்தி அரசர், திருடர், உயிர்கள், பகைவர், தாம், தம் சுற்றம், இவ்விடங்களினின்று வரும் பயத்தைக் குடிகளுக்குப் புகாமற் றடுத்து உலக முழுதும் காக்கும் மிகுபுகழைப் படைத்த அரசியல் வாழ்க்கையுடைய வீரர்கள் வாழும் இடங்கள் பல அவ்விடத்திலுள்ளன. தகைபெறுவலி-தகைதல் (பிறரிடம் புகாது சிறை செய்யப்)பெற்ற வன்மையுமாம். ‘‘காவற் சாகாடு கைப்போன்” (புறநா. 185.2) வணிகர் இருக்கை மேதகு விரிஞ்சன் அரும்பெறல் குறங்கை விழைதகையாய் எனப் படைத்தோர், ஏதிலர் பொருளும் தம்மபோல் பேணி வாணிபம் ஈட்டுநர் வடாது, மாதிரத் தலைவன் புறங்கொடுத் திரியும் வளத்தினார் மறைநெறி ஒழுக்கம், ஆதரித் துயர்ந்த விழுக்குடி வணிகர் அமர்ந்துவாழ் இடம்பல அவண. 105 மேன்மை பொருந்திய பிரமனுடைய துடையைப் பெறலரிய விருப்பம் அமைந்த தாய் என்னும்படி அதனிடத்துத் தோன்றியவர் |