பிறர் பொருளையும் தம்முடைய பொருளைப்போலப் போற்றிவாணிகத்தால் பொருள் தேடுவோர். வடதிசைக்குத் தலைவனாகிய குபேரனும் தோற்றோடும் நிதிச் செல்வர். வைதிக ஒழுக்கங்களை விரும்பி ஒழுகுதலின் உயர்ந்த மேலான குடி வணிகர் விரும்பி வாழும் இடங்களும் பல அவ்விடத்தன. வணிகர்முறை; ‘‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப், பிறவுந் தமபோற் செயின்” (திருக். 120) வணிகர் பிரமன் துடையிற் பிறந்தவர் என்பது மிருதி நூல் வழக்கு. வேளாளர் இருக்கை முருகுயிர்த் தலர்ந்த மலரவன் தனாது முகமுதல் உறுப்பெலாந் தாங்கிச், சரணமென் றுரைக்கும் உறுப்பினில் தோன்றிச் சாற்றும்அம் முகமுதல் உறுப்பின், வரும்ஒரு மூவர் தங்களை உழவின் வண்மையான் நிலைபெறத் தாங்கும், உரியவே ளாண்மை பூண்டபேர் தமக்கே உடையவர் இடம்பல அவண. 106 நறுமணம் கமழ்ந் தலர்ந்த மலரிலுறை பிரமன் தன்னுடைய முகமுதலாம் உறுப்புக்களை எல்லாம் தாங்குதலின் சரணமென்று கூறப்பெறும் உறுப்பினில் தோன்றி முகம், தோள், துடை என்னும் உறுப்புக்களில் தோற்றிய ஒப்பற்ற அந்தணர், அரசர், வணிகர் என்னும் இம்மூவகையோரையும் உழவு வளத்தால் நிலைபெறத் தாங்குதற்குரிய உபகாரம் எனும் பொருளை உடைய வேளாண்மையைத் தமக்கே உடைமையின் வேளாளர் ஆவார் இடங்கள் பல அவ்விடத்தன. மற்றையோர் இருக்கை நால்வகை வருணத் துயர்குடிப் பிறந்த நல்லவர் இருக்கையைச் சூழ்வ, சால்புறும் அவரில் உயர்ந்தவர் இழிந்தோர் தங்களுள் குழீஇ மணந் தளித்த, பால்படும் ஏனைச் சாதிபே தத்தோர் பலர்களுந் தத்தம நெறியின், சீலராய்த் துவன்றி மரபுளி ஒழுகுந் திருமலி பல்வகைக் குடியே. 107 வேற்றுமை தெரிந்த நாற்பாலவாகிய வருணத்துள்ளும் உயர்ந்த குடியில் பிறந்த நல்லவர்தம் குடியிருப்புக்களை அமைதிமிகும் அவருள் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் தங்களுட்குழுமி மணம் புணர்ந்தீன்ற பிரிவு பெறும் பிறசாதி வேறுபாட்டினர் பலரும் தத்தம் மரபுக்கும் நிலைக்கும் வாய்ந்த நெறியின் வரும் ஒழுக்கத்தையுடையராய் நெருங்கி மரபொடு பொருந்த ஒழுகும் செல்வம் மிக்க பல்வகையான குடிகள் சூழ்வன. கழகம் வளர்இலைத் தருப்பை நுனியெனக் கூர்த்த மதியினர் தொன்றுதொட் டுடைய, பளகறு கேள்விப் பயிற்சியர் மேற்கோள் முதற்பகர் மூன்றினும் தெருட்டி, இளையருக் குணர்த்தும் இலக்கண நெறியோர் ஈரிரு புலமையர் தம்முள், களவிகல் இகழ்ந்து குழாங்குழா மாகிக் கலைதெரி கழகமும் பலவால். 108 |