பக்கம் எண் :


திருநகரப் படலம் 87


     கச்சியில் எழுந்தருளியுள்ள திருவேகம்பநாதர் பொய்த்தலின்றி அன்பு
செய்து நாளும் வணங்கி வாழ்பவர் உயிர்விடுங் காலத்தில் சிவலோகத்தை
ஏறி அடைவதற்கு வைக்கப்பெற்ற ஒப்பற்ற ஏணியையும் ஒக்கும் கோபுரம்.

     பொச்சம் இன்றி நச்சுதல்; ‘‘பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும்கண்டு, நக்கு
நிற்பர் அவர்தமை நாணியே” (திருநா.)

     என்னும் அருள்மொழி காண்க.

பரிதியின் நிழல்செயக் கதிர்க்கும் பன்மணித்
திருவியல் கோபுரச் செல்வ வாய்தலின்
முரசுகா லந்தொறும் முழங்குஞ் செவ்வியென்
றருகுற அமரரை அழைத்தல் மானவே.           115

     தனது ஒளி சூரியன்மேற் படும்படி ஒளியை விடுகின்ற பல மணிகளைக்
கொண்டு அழகுற இயற்றப் பெற்ற கோபுரம் அமைந்த செல்வத்திருவாயிலில்
தேவரை வணங்க வருதற்குரிய காலம் ஈதென அழைத்தலை ஒப்பக்
காலந்தோறும் முரசு முழங்கும்.

     சூரியனை ஒப்ப ஒளிவிடும் எனினும் ஆம். செல்வவாய்தல்; ‘‘திருவா
யிலினைப் பணிந்தெழுந்து செல்வத் திருமுன் றிலைஅணைந்து” (திருத்.
திருநா) காலம், ஆறுகாலம் முதலியன. ‘‘காலம் நன்குணர்ந்து சினகரம்
புகுந்து” (சோண). ‘விண்ணுலகிற்குக் கேட்கும் அளவினது முரசொலி.

கொடி

மடுத்தஐம் பாசம்ஆ வரணம் ஐந்தனால்
தடுத்தருள் கோயிலில் தம்பி ரான்எதிர்
எடுத்தபூங் கொடிமிசை இடபம் வான்மிசை
அடுத்ததோர் இடபத்தோ டளவ ளாவுமே.       116

     உயிரை அகப்படுத்திய ஐம் பாசம் போலத் திருமதில் ஐந்தனால்
தடுத்து அருள் செய்கின்ற திருக்கோயிலில் உயிர்களுக்குத் தலைவனாகிய
பெருமான் திருமுன்னர் தூக்கிய அழகிய கொடியில் எழுதப்பெற்ற இடபம்,
ஆகாயத்தில் அடுத்ததோர் இடபராசியொடு கூடிநிற்கும்.

     இனம் இனத்தொடு சேரும். ஐம்பாசமாவன; ஆணவம், கன்மம்,
மாயை, மாயேயம், திரோதானம் என்பன, ஐம்பாசம் மடுத்து அதனுள்
விளங்கும் உயிரிடை மருவும் பதியை, ஐம் மதிலுள் திகழும் இடபத்தின்
முன் விளங்கும் அருட்குறியொடும் வைத்துத் திருக்கோயிலின் அமைப்பைக்
காண்க.

தூபி

தங்குலத் திறைவிசெய் பூசைச் சால்பினை
அங்கண்நன் மகிழ்வொடுங் காணும் ஆசையின்
எங்குள வரைகளும் ஈண்டி னாலெனப்
பொங்கெழில் சிகரங்கள் பொலிந்து தோன்றுமால்.      117