தமது குல மலையரையன் பொற்பாவையாகிய உமையம்மையார் செய் பூசையின் சிறப்பினைக் கண்டு தொழும் விருப்பினால் எங்குள்ள மலைகளும் அங்கு வந்து நெருங்கினாற் போல மிகுந்த அழகினையுடைய (கோபுரத்துத்)தூபிகள் பொலிந்து காணப்படும். மண்டபம் கன்மநோய் குடைபவர் கடப்பச் செய்திடும் பன்மலர் துவன்றிய தீர்த்தப் பாங்கரில் பொன்மலர் மண்டபம் பொலிந்து தோன்றுவ தென்மணிப் பேழையைத் திறந்த மூடிபோல். 118 | மூழ்குவோர் இருவினையாகிய, நோயை நீக்கும் பல் வகை மலர்கள் செறிந்த தீர்த்தத்தின் கரையில் பொன்னொளி விரிந்த மண்டபம், அழகிய மணிகளைக் கொண்ட பெட்டிகளைத் திறந்த மூடிகளைப் போலத் தோன்றுவன. வேள்விச் சாலை அறுசீரடி யாசிரிய விருத்தம் சேந்தபொற் குண்டத் தோங்குஞ் சிகைத்தழல் மிசைஏ கம்ப வேந்தைஆ வாகித் தேத்தும் புகைபொதி வேள்விச் சாலை ஏய்ந்தசீர்த் தகர வித்தை முறைப்படி இதயக் கஞ்சப் பூந்தழற் சிகைமேல் ஈசற் போற்றுமா யவனை ஒக்கும். 119 | சிவந்த அழகிய வேள்விக் குண்டத்தி லெழும் தீக்கொழுந்தின் மேல் விளங்கி நின்றருள் செய்யும்படி திருவேகம்ப பெருமானை எழுந்தருளுவித்துத் துதிக்கின்ற புகை நிரம்பிய வேள்விச்சாலை, சிறப்புப் பொருந்திய தகர வித்தையின்வழி உள்ளமென்னுந் தாமரை மலரிற் பொலிவமைந்த சுடர்க் கொழுந்தின்மேற் சிவபிரானை எழுந்தருளுவித்துப் போற்றும் திருமாலை ஒக்கும். திருவேகம்பர் கோழரை காம்பாச் சாகை வட்டம்மேல் குடையாப் பொற்பின் வாழிய ஒருமா மீது வளநிழல் கவிப்ப ஆங்கண் ஊழ்முறை உயிர்கட் கெல்லாம் ஐந்தொழில் ஓம்பி எம்மான் ஆழ்புனல் உலகம் ஏத்த அரசுவீற் றிருக்கும் மன்னோ. 120 | செழித்த அடிமரம் காம்பாகவும், கிளைகள் வட்டமாக அமைந்த மேற்குடையாகவும் அழகிய (ஏகாம்பரம்) ஒரு மாமரம் மேல் வளவிய நிழலைத்தர அந்நிழலில் படிமுறையாக உயிர்களுக்கெல்லாம் (பருவம் வர) ஐந்தொழிலை நிலைபெறச் செய்து எம்பெருமான் ஆழ்ந்த நீர் (ஆழி) சூழ்ந்த உலகம் துதிக்க அரசு செயா நிற்கும். மாமரம் வெண் கொற்றக்குடை, ஐந்தொழிலாவன; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. எவ்வுலகுள்ள உயிர் வருக்கங்களையும், உடம்பையும், உயிரையும் காத்து இங்கு வீற்றிருத்தல் எண்ணத் தக்கது. |