பற்பல தேய மெல்லாம் பாங்குடைத் தொண்டை நாடு பற்பல சங்க நாப்பண் படர்வலம் புரியாம் அங்கண் பற்பல நகர மெல்லாம் வட்டமாப் படைத்த காஞ்சி பற்பல வலம்பு ரிக்குள் சலஞ்சலப் பணில மாமால். 121 | பற்பல நாடுகள் சூழ்ந்துற நடுவில் விளங்கும் தொண்டை நாடு, ஆயிரம் இடம்புரிச் சங்குகளின் நடுவில் இருந்த வலம்புரிச் சங்கொக்கும். பலப்பல நகர்களைச் சூழக்கொண்டு இடைநின்ற காஞ்சிபுரம், ஆயிரம் வலம்புரி சூழ நின்ற சலஞ்சலச் சங்கம் ஒக்கும். அத்திருக் காஞ்சி வைப்பின் அலகிலாத் தலங்கள் தம்முள் பத்திசேர் மாடக் கம்பம் பாஞ்சசன் னியமாம் அந்த உத்தமச் சுரிமு கத்துள் விலைவரம் புணராச் சாதி முத்தமே ஒருமா மூலத் திருந்தருள் முக்கண் மூர்த்தி. 122 | திருவினையுடைய கச்சி நகர்க்கண் உள்ளபல தலங்களினும் வரிசை பெற அமைந்த மாளிகைகளைக் கொண்டிடையே விளங்கும் திருவேகம்பம், ஆயிரம் சலஞ்சலச் சங்குகளின் இடையே வீற்றிருக்கும் பாஞ்ச சன்னியச் சங்கினை ஒக்கும். அவ்வாறுயர்ந்த சங்கினுள் விலை வரம்பறுக்க இயலாத உயர்ந்த முத்தினை ஒப்பவர் ஒப்பற்ற மாவடியில் எழுந்தருளியிருந்து அருள் செய்கின்ற முக்கண் முதல்வர். பன்மணி வெயில்கள் கான்று படர்இருள் சீப்ப வட்டப் பொன்மதில் சூழ்ந்து நாப்பண் சதாசிவப் புத்தேள் வைகும் தன்மையால் கச்சி மூதூர் தரைமிசை உயிர்கள் செய்த கன்மம்ஓர்ந் தளிப்பான் வந்த கதிர்செய்மண் டிலமே யாமால். 123 | கச்சிப்பழம் பெரும்பதி, பலமணிகள் ஒளியை உமிழ்ந்து பரவிய இருளை ஓட்ட, வட்டமும், பொன்மயமும் உடைய மதில் சூழ்ந்து விளங்க நடுவில் சதாசிவ மூர்த்தி எழுந்தருளியிருக்கும் இயல்பினால் உயிர் செய் வினைப்பயன்களை அறிந்து அளித்தற் பொருட்டுத் தரைமிசை வந்த சூரிய மண்டிலத்தை ஒக்கும். விலக்கிலா அறநூல் சொன்ன முனிவரும் விதிவி லக்காம் இலக்கியம் இதன்பால் கண்டே இலக்கணம் விதித்தார் போலும் அலக்கண்நீத் தறம்எண் ணான்கும் அம்பையே வளர்க்கு நீரால் கலக்கமில் அறங்கட் கெல்லாம் ஆகரங் காஞ்சி யன்றோ. 124 | துன்பங்களைத் துடைத்து முப்பத்திரண்டு அறங்களையும் உமையம்மையே வளர்க்கும் இயல்பினால், என்றும் நிலை கலங்காத அறங்கட்கெல்லாம் உறைவிடம் காஞ்சியே யாகும். ஆதலின், யாவருங்கைக்கொள்ள அற நூலை அருளிய முனிவரரும் அறமாகிய இலக்கிய முணர்ந்து விதி விலக்காம் இலக்கணத்தை விதித்தனர் போலும்! எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின் றெடுக்கப்படும் இலக்கணம். |