உவரிசூழ் உலகவைப்பின் உரையமை கேள்வி சான்ற கவிகளென் றுரைப்போர் தம்முள் காஞ்சியைப் புகழார் இல்லை அவரெலாம் புகழ்ந்தும் இன்னும் உலப்புறா அதன்சீர் முற்றுஞ் சிவநிறை கல்வி சாலாச் சிறியனோ கிளக்க வல்லேன். 125 | கடல் சூழ்ந்த நிலவுலகில் பொருளமைந்த கேள்வி நிரம்பிய கவிகளென்று பேசப்படுவோர் தம்முள் காஞ்சி நகரைப் புகழாதார் ஒருவருமிலர். புலவர் யாவரும் புகழ்ந்தும் முற்றுப்பெறாத அதனைச் சிற்றறிவினேன் ஆகிய யானோ எடுத்துக் கூற வல்லமையுடையேன். இத்திருக் காஞ்சி வைப்பின் பலதளி யிடத்தும் மேவி அத்தகு கம்ப வாணர் அவரவர்க் கருளிச் செய்த உத்தமக் காதை யெல்லாஞ் சூதன்அன் றுரைத்த வாறே முத்தமிழ் அறிஞர் தேற மொழிபெயர்த் துரைப்பேன் உய்ந்தேன். | காஞ்சிபுரத்தில் பல திருக்கோயில்களிலும் மேவித் திருவேகம்பப் பெருமான் அவ்வவர்க்கு வேண்டிய நலங்களை அருளிய வரலாறுகளைச் சூதபுராணிகர் அருளியவாறே முத்தமிழ் அறிஞர் தெளிய வடமொழியினின்றும் தமிழ்மொழியிற் பெயர்த்துரைப்பேன் பிறவியினின்றும் தப்பினேன். நகரப் படலம் முற்றுப் பெற்றது. ஆகத்திருவிருத்தம் 298 |