பக்கம் எண் :


96காஞ்சிப் புராணம்


     பொன்பெயர் படைத்தோன் கிளைஞரோ டெய்திப்
பூசைசெய்தரசுபெற் றதுவும், கொன்பயில் விடையோன் அருள்வழி
மாயோன் மடங்கலாய் அவனுயிர் குடித்துப், பின்புகும் தருக்கைச்
சரபமாய்த் ததற்பின் பிழைகெடப் பூசித்த வாறும், வன்புடை இரணி
யாக்கனை இறுத்த பன்றிபின் வழிபடும் இயல்பும்.            16

     இரணியன் உறவினரொடும் போந்து வழிபாடியற்றி அரசு வீற்றிருந்ததும்;
பெருமைபொருந்திய விடையுடைப் பரமன் ஆணைவழி மாயவனார்
நரசிம்மமாய் இரணியனை அழித்துச் செருக்கித் தாம் உலகை அழிக்கையில்
பெருமான் சார்த்தூலப்பறவையாய் அந்நரசிங்கத்தைச் செகுத்து அதன்
தோலைப் போர்த்துக்கொள்ள நல்லுணர்வு பெற்றுத் திருமால் பழிதீர
வழிபட்டதும்; வலிமை அமைந்த இரணியாட்சனை அழித்த வராகாவதார
மூர்த்தி வழிபட்டதும்;

     (இரணியன், இரணியாக்கன் என்பன பொன் வடிவினன், பொற்
கண்ணன் என்பன ஆகும்.) உயிர் குடித்தல், இலக்கணை வழக்கு.

     அந்தகன் பரசிப் புவிமுழு தாண்டு கடைமுறை அருள்பெறுமாறும்,
வெந்திறல் வாணன் இறுதியிற் பரவி விறற்கணத் தலைமைபெற் றதுவும்,
கந்தமென் மலர்கொண் டடிதொழு தோணகாந்தனுங் கதிபெறு மாறும்,
மைந்துற வழுத்திச் சலந்தரன் கடைக்கால் வீட்டின்பம் மருவிய வாறும்.
                                                    17

     அந்தகாசுரன் வணங்கிப் புவி முழுதும் அரசு செலுத்தி முடிவில் வீடு
பெற்றதும்; பெருவலியுடைய வாணன் முடிவிற் றுதித்து வன்மை அமைந்த
கணநாதருட் டலைமையை, எய்தியதும்; ஓணனும், காந்தனும் மணம் கமழும்
மலர் கொண்டு பூசனை செய்து முத்தி பெற்றதும்; சலந்தரன் வன்மை மிகத்
துதித்து முடிவில் பேரின்பம் எய்தியதும்;

     கேசவன் திருமாற் பேற்றினிற் போற்றிக் கிளரொளி ஆழிபெற்
றதுவும், வேசறு பரசி ராமன்ஏத் தெடுத்து வெம்மழுப் படைபெறு
மாறும், தேசுறப் பரவி இரேணுகை யென்பாள் தெய்வத மாகிய வாறும்,
மாசறும் யோகா சாரியர் தொழுது வழங்குதம் பதம்பெறு முறையும்.  18

     திருமால் திருமாற் பேற்றினிற் போற்றிச் சுடர் விடுகின்ற சக்கரம்
பெற்றதும்; தளர்ச்சியறு பரசிராமன் துதித்துக்கொடிய மழுவாயுதம் பெற்றதும்;
தெய்வத் தன்மை பெற இரேணுகை பரவி அப்பேற்றினை அடைந்ததும்;
குற்றம் இல்லாத யோகாசாரியர் தொழுது விளங்குகின்ற ஆசாரியர் பதவியை
எய்தியதும்;