7. ஆயிரங் கல்லி னகன்ற பரப்ப தாயய னாட ரவாவுற நீங்கிப் போயவ ரேங்கப் பொலிவுறு செல்வம் தாயது மாண்ட சரக்கறை மானும். 8. ஆயநன் னாட்டி னணியுறுப் பாக ஞாயிறு செல்ல நடுக்குற வோங்கிச் சேயுயர் வானின் றிகழ்மணித் தூணின் மீயுயர் செல்வக் குமரி விளங்கும். 9. அம்மலை மேற்கி னணியர ணாகத் தம்மன வூக்கந் தளர்வுற வொன்னார் செம்மலை வீழ்க்குந் திறனொ டகன்று கம்மென வானங் கடந்துற வோங்கும். 10. அம்மலை தோன்றி யதன்பெயர் பெற்றுக் கைம்மலை கண்டு களித்தெதிர் செல்லும் மைம்மலை போல வளனுறப் பாய்ந்தே அம்மலை நாட்டையவ் வாறணி செய்யும். 11. நாட்டு புகழ்த்தமிழ் நாட்டி னதுதென் கோட்டிலின் றுள்ள குமரி முனைக்கு நோட்ட மிகுமிரு நூறுகற் றெற்கில் ஊட்டுங் குமரியா றோடின காணும். 12. தொன்மலை யென்னத் துலங்குங் குமரி நன்மலைத் தெற்கின் நனிமுகில் மேயும் பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு மன்மலை யாத மணிமலை யோங்கும். 13. வானுற வோங்கி வளஞ்செய் குமரி தானுற வாகித் தளைப்படுத் தென்ன ஊனுற வொன்றி யொருதொட ராகி ஆனவப் பன்மலை யாங்கணி கிற்கும். 14. அத்தொடர்க் குன்றத் தருமக வாகி முத்தமி ழாளர் முதுநெறி போலப் பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும். ------------------------------------------------------------------------------------------ 9. செம்மல் - (பகைவரின்) செருக்கு. 11. நோட்டம் - பார்வை. ஊட்டுதல் - வளஞ் செய்தல். 12. மலைதல் - மயங்குதல். | |
|
|