15. மைவளம் பட்ட வளக்கும ரிக்கும் நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில் பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு பெய்வளம் பட்டுப் பெருகியே சென்ற. 16. இன்னு முகிலின மேயபல் குன்றுந் துன்னுபல் லாறுந் தொகுவளஞ் செய்ய என்னிலை யென்றவ் விருநில மங்கை மன்னு பெருவளம் வாய்ந்து பொலிந்தாள். 17. குணகரை குன்றங் குறும்பனை யோடு மணமிகு தெங்க மதுரைமுன் பாலை இணருபின் பாலையோ டேழ்தலை மேய உணவமல் நாற்பதோ டொன்பது நாடே. 18. கொல்லம தோடு குமரி முதலா மல்லன் மிகும்பன் மலைவள நாடும் எல்லியல் பாகவே ழேழொடு குன்றா நல்லியல் பாகவந் நாடு பொலிந்த. | தென்பாலி | 19. அப்பெரும் பஃறுளி யாற்றின தெற்கில் திப்பிய தென்கடல் தெற்கின தாகக் கப்பிய பல்வளங் காமுற யாரும் நப்புகழ் மேயதென் பாலி நளியும். 20. இடைநில மைந்துநூ றெண்ணரு கல்லிற் படவொளி மேய பவளமு முத்தும் கொகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு கடல்வளங் கண்டு களித்ததந் நாடே. ------------------------------------------------------------------------------------------ 15. நொய் - மென்மை. பை - பசுமை, அழகு. பெய்வளம் - மழைவளம். 16. ‘என் நிலை’ - தருக்குச் சொல். 17. இணர்தல் - நெருங்குதல். அமலுதல் - பெருத்தல். ஏழ்தலைமேய - ஏழ்என்னும் எண்ணை முதலிலுடைய ஏழ்குணகரைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குறும்பனை நாடு, ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு எனக் கொள்க. 18. கொல்லம், குமரி முதலிய மலைநாடுகள். எல் - பெருமை. நல் இயல்பு ஆக - நல்ல வளம் பொருந்த. அந்நாடு - பெருவளமும் தென்பாலியும். 19. ந - சிறந்த. நளியும் - பரந்திருக்கும். | |
|
|