பக்கம் எண் :


இராவண காவியம் 119

   
           24.ஒட்டியோர் நிலைய ராக வுலகநா கரிக மூக்கத்
                 தொட்டவர் கிணறு முன்னர்த் தோட்டியென் றழைக்கப் பட்டார்
                 கட்டிடங் கட்டி நாடு கண்டுநன் குண்டு வாழ
                 வெட்டியோர் காட்டை முன்னர் வெட்டியா ரெனப்பட் டாரே.

           25.    ஈங்குசெய் தொழிலி னாலே யினப்பிரி வானா ரன்றி
                 ஆங்கவர் தம்மு ளாண்டா னடிமையாங் கொடுமை யின்றிப்
                 பாங்குறு தொழிலுக் கேற்ற பயனையவ் வவரே யெய்தி
                 ஓங்கிய செல்வத் தாராய் ஒருகுறை யின்றி வாழ்ந்தார்.

           26.    இவ்வகைத் தொழிலுக் கேற்ப வினப்பிரி வினராய் வாழ
                 அவ்வகைத் தொழில்செய் வார்நா ளடைவிலத் தொழிலே செய்யும்
                 குவ்வையர்க் குள்ளே கொண்டு கொடுத்துவந் ததனாற் பின்னர்
                 ஒவ்வொரு தொழில்செய் வோரும் ஒவ்வொரு வகுப்பா னாரே.
 
4. தலைமக்கட் படலம்
 
அறுசீர் விருத்தம்
 
           1.     குறிஞ்சியி லிருந்து முல்லை குறுகிப்பின் மருத நண்ணித்
                 திறஞ்செறி வடைந்த பின்னர்த் திரைகடல் நெய்தல் மேவி
                 மறஞ்சிறந் தயனா டேகி வணிகத்தாற் பொருணன் கீட்டி
                 அறம்பொரு ளின்ப முற்றி யழகொடு வாழுங் காலை;

           2.     தங்களுக் குள்ளே தங்கள் தலைவரைத் தேர்ந்தெ டுத்தாங்
                 கங்கவ ராணைக் குட்பட் டச்சமொன் றின்றி யன்னார்
                 தங்கடந் தொழிலைச் செய்து தகுதியாற் றாழ்வி லாது
                 மங்கலம் பொருந்த வாழ்ந்து வந்தன ரினிது மாதோ.

           3.     மழைவளக் குறிஞ்சி வாழ்ந்து வந்தகா னவர்கள் தம்முன்
                 விழைதகு தலைவன் செய்ய மேனியாற் சேயோ னென்னும்
                 அழகுறு பெயரைத் தாங்கி யரசுவீற் றிருந்தா னன்னோன்
                 வழிவழி வந்தோர்க் கெல்லாம் வழங்கின தப்பேர் தானே.
           4.     மாலையில் மலரு முல்லை மாலையை யணியு முல்லைக்
                 காலியின் வளங்கண் டுண்டு களித்திடும் பொதுவர் தங்கள்
                 மேலைய தலைவன் காரின் விளங்கியே மாயோன் என்னும்
                 மாலைய பெயர்பூண் டானவ் வழியரு மப்பேர் பூண்டார்.
------------------------------------------------------------------------------------------
           26. குவ்வை - கூட்டம். 4. காலி - ஆக்கள். மாலைய - தன்மைய.