மாபெருந் தலைவன் | 12. தண்டமி ழகத்தை முற்றுந் தனியர சோச்சத் தாழ்வில் திண்டிற லொழுக்க மேன்மை திறம்பிடா நீர்மை மேய தண்டமிழ் மகனைத் தங்கள் தலைவனாக் கொண்டா ரந்தப் பண்டையோன் மரபில் வந்தோர் பாண்டிய ரெனப்பட் டாரே. | கலித்துறை | 13. வென்றி வேலுடை வேந்தனு மணிமுடி வேய்ந்தே அன்று தண்டமி ழகத்தினாப் பண்ணதன் முகம்போல் இன்றி லங்கையந் தீவுதென் மேற்கினி லெழிலோ டன்றி ருந்ததொன் னகரினி லமர்ந்தினி தாண்டான். 14. நானி லத்தவ ரவரவர் முறைப்படி நடக்க மேனி லத்தவர் பொருள்கொடு மிகுபொருள் விடுப்பத் தானி னைத்தது தமிழர்கள் நினைத்ததே தானா தேனி னித்தசெந் தமிழ்வளர்த் தேமுறை சிறந்தான். 15. பின்னர் நாள்பல செல்லவோர் பெருந்தலை மகனும் தன்ன ருந்தலை மகனைமுத் தமிழ்தனி வளர்க்க நன்னர் மேயதென் பாலியாம் பெருவள நாட்டின் மன்ன னாக்கின னன்னனும் வண்டமிழ் வளர்த்தான். 16. பைந்த மிழ்வளர்த் துவக்குமப் பாண்டிய மன்னன் சிந்தை போற்செயல் திருந்தவே முறைசெய்து சிறக்கத் தந்தை தாயினும் அன்புடன் தமிழகம் புரக்கும் எந்தை மாபெருந் தலைவனு மினிதென மகிழ்ந்தான். 17. இன்ன போலவே கிழக்குநா டென்னுமவ் விடத்திற் கன்னை போவோ ரின்புடைத் தமிழ்மகன் தன்னை மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்தான் இன்ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர். 18. ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த நாகை மாநகர் தனிலினி திருந்துநா ணாளும் ஈகை யோடுசெங் கோலற முதலிய வெவற்றும் வாகை சூடியே வழிவழி பொலிந்தனர் மன்னோ. ------------------------------------------------------------------------------------------ 13. நாப்பண் - நடு. 14. மேனிலன் - மேல்நாடு. பொருள் - சரக்கு. 18. ஓகை - உவகை வாகை - வெற்றி. | |
|
|