19. நாழி யாலுயிர் தாங்கிடு மக்களை நாளும் வாழ வைத்திடு முணவினிற் குறைவிலா வளத்தாற் சோழ மிக்கவண் விளைந்ததால் முன்னவர் சொன்னார் சோழ மென்றதை யாண்டவ ராயினர் சோழர். 20. இந்த வாறவன் கிழக்குநா டாண்டவ ணிருக்கச் செந்த மிழ்க்குட நாட்டினுக் கோர்தமிழ்த் திருவாய் மைந்த னைத்திரு மன்னனாக் கினனவன் மரபில் வந்த மன்னவ ரேதமிழ் வான்புகழ்ச் சேரர். 21. தெருவி லாடிளஞ் சிறுவர்பந் தெறியவே சிதறி இருவி சும்பிடைப் புகுதர வினப்பகை யென்று வெருவி மாமதி மறைமுடி மேக்குயர் வஞ்சி மருவி யின்பொடு வழிவழி சிறந்தனர் மாதோ. 22. மாரி யோவறா வளமுடைத் தாகிய மலையின் சேரல் சூழக நாட்டிடை வாழ்விடஞ் சேரச் சேரல் என்பதை யம்மலை நாட்டொடு சேர்த்துச் சேரம் என்றனர் ஆண்டவ ராயினர் சேரர். 23. மாரி போற்பொரு ளீந்துமே தாய்மொழி வளர்த்த சேர சோழபாண் டியரெனத் தமிழர்கள் செப்ப வீர ராகவும் புலவர்க ளாகவும் வெருவாச் சூர ராகவும் விளங்கினா ரிவர்வழித் தோன்றல். 24. அன்ன மூவருந் தன்னின்கீ ழன்னசிற் றரசர் தன்னை யேற்படுத் தியல்பொடு தமிழகந் தன்னைப் பன்னு நூற்றுறை பழுத்தநற் பழந்தமிழ்ப் புலவர் சொன்ன சொற்படி புரந்திசைத் தொடைபுனைந் தனரே. 25. குலவு செல்வமுங் கல்வியுங் குடிவளர் கோட்டத் தலைவ ராயசிற் றரசர்கீ ழூரகத் தலைவர் மலைவி லாதெலா மக்களுந் தகவுற வாழக் கலைவ லாருளக் கருத்தொடு கனிவுறக் காத்தார். 26. தூய வூரகந் தனையினி தோம்பிடத் தொல்சீர் மேய நல்லரை நிறுவவூர் மக்களம் மேலோர் ஆய யாவையும் குறைவிலா தமைவுற வாக்கித் தாயி னும்பெரி தன்புடன் காத்துவந் தனரே. ------------------------------------------------------------------------------------------ 19. சோழம் - சோளம், போலி. ஏழ்தெங்க நாடு என்பது காண்க. 22. (உதியஞ்) சேரல் என்னும் பெயர் வழங்குதல் காண்க. 25. கோட்டம் - நாடு, ஊரகம் - கிராமம். | |
|
|