6. இன்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும் பொன்னேபோ லருள்பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார் கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர் பொன்னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்நாடர். 7. நலக்குறையே வலக்குறையா நற்குணநற் செய்கைதமக் கிலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கணமா யெனைத்தொன்றும் சொலக்குறையா மனைவாழ்க்கைத் துறைநின்று முறைவாழ்ந்தார் இலைக்குறையென் றெனைவளமு மினிதமைந்த வியனாடர். 8. பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும் திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும் வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார் கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடார். 9. கேண்மையிடை யறாவுளமுங் கிளைதழுவுங் கிழமையுஞ்சான் றாண்மையொடைம் பூதவுல கறிவுமுயிர் மெய்யறிவும் தோண்மையுந் தாளாண்மையு நற்றுணையுறவே நனிவாழ்ந்தார் நாண்மைநிலை யறிந்துதக நடந்துநலம் பெறுதமிழர். 10. அன்புக்கோ ருரைகல்லாய் அருளுக்கோர் நிரையில்லாய் பின்புக்கோர் வழிநிலையாய்ப் பெருமைக்கோ ரொளிமலையாய் இன்புக்கோர் உறையிடமா யிசைபரவத் திசைவாழ்ந்தார் துன்புக்கோர் செயல்புரியாத் துற்றசுவைப் பொற்றமிழர். 11. தன்னலமென் னும்பொருளைத் தான்காணா ராய்ச்செய்யும் இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமா நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால் பன்னலமும் பொருந்தியதன் பயன்றுய்க்கும் பழந்தமிழர். ------------------------------------------------------------------------------------------ 6. புறந்தருதல் - காத்தல். கொன் - மிகுதி. 7. நலக்குறை - நலம். வலக்குறை - வலி. 8. பொருவு - ஒப்பு. வெருவிலே - அஞ்சி. 9. கேண்மை - நட்பு. கிழமை - உரிமை. ஐம்பூதம் - நிலம் நீர் தீ காற்று வெளி. தோண்மை - வலி. நாண்மை - வாழ்நாள். 10. வழிநிலை - வழிகாட்டி. இசை திசைபரவ. | |
|
|