பக்கம் எண் :


இராவண காவியம் 125

   
           12.    முட்டாற்றுப் படவெவரு முயலாமை யெனுங்குறையை
                 விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் படவாழ்ந்தார்
                 நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்வளர்க்குங்
                 கொட்டாட்டுப் பாட்டுடைய குலமோங்குங் குணநாடர்.

           13.    அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக்
                 கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய்
                 அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார்
                 எவ்வளவு மிறைமுறையி னியனெறிமா றாத்தமிழர்.

           14.    கூலியா யிரங்காணங் கொடுக்கினுமே கோலொருவும்
                 போலியா ரெனுமுரையைப் பொய்யாக்கி மெய்ந்நின்றார்
                 வேலியா யிரங்கலநெல் விளைவுயர் மலையிலெழுந்
                 தாலியா வருமொலிய லனைவளற்றுந் தமிழ்நாடர்.

           15.    மண்ணரசு மனையரசும் மற்றையபஃ றொழிலரசும்
                 பெண்ணரசு மாணரசும் பிரியாத பேரரசாய்
                 நண்ணரசு புரிந்தொருங்கு நல்லரச ராய்வாழ்ந்தார்
                 பண்ணரசர் வளர்த்தவிசைப் பாவரசத் தமிழரசர்.

           16.    இல்லாமை வறுமையவர்க் கியலாமை தீச்செயலே
                 சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே
                 செல்லாமை தீநெறியே தீண்டாமை பிறர்பொருளே
                 கல்லாமை களவிவறே கருதாமை யறங்கடையே.

           17.    பொன்மான மானாலும் பொருண்மான மானாலும்
                 மன்மான நிலைதீர்ந்து மதிமான மானாலும்
                 கன்மான வயலார்முன் கையேந்திப் பல்லிளியார்
                 தன்மான மாறாத தகுமானத் தனித்தமிழர்.

           18.    சிறந்தானும் பெருமையினிற் றீர்ந்தானு முரிமையெலாந்
                 துறந்தானும் பொருவுநிலைத் துறைபோந்து முறைவாழ்ந்தார்
                 இறந்தேனும் பொதுவாழ்வுக் கியன்றனசெய் குவதல்லான்
                 மறந்தேனும் பிறன்கேடு சூழாத மணித்தமிழர்.
------------------------------------------------------------------------------------------
           12. முட்டு - குறைவு, இடையூறு. ஆற்றுப்பட - செல்ல. 14. காணம் -
பொன். ஆலித்தல் - ஒலித்தல். ஒலியல் - ஆறு. வளற்றும் - வளஞ்செய்யும். 16. குறளை
- கோட்சொல். சோர்தல் - மறத்தல். இவறு - உலோபம். அறங்கடை - குற்றம். 17.
மானம் - கேடு. மான - ஒப்ப. 18. பொருவு நிலை - ஒத்தநிலை.