பக்கம் எண் :


126புலவர் குழந்தை

   
           19.    உளமலிந்த பெருங்காதற் கடல்படிந்த வொப்புடையார்
                 களவியலாம் புணைதழுவி்க் கற்பியலாந் துறைநண்ணி
                 வளமலிந்த மனைவாழ்க்கைக் கரையேறி மகிழ்பூத்தார்
                 குளமலிந்த புனன்மருதக் கொடையெதிருங் குளிர்நாடர்.

           20.    காதலரும் பாதவரைக் காதலிக்குங் கழிமடமும்
                 காதலர்தம் மிடைத்தோன்றுங் கைகடந்த காமமதும்
                 தீதெனவே நீத்தின்பத் திறந்தெரிந் திகழ்ந்தார்கள்
                 போதலர மதியெனப்பூங் குமுதமலர் புனனாடர்.

           21.    காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு
                 சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல்
                 ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக்
                 காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர்.

           22.    அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே
                 மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப்
                 புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார்
                 திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர்.

           23.    ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ்
                 சான்றவர்நல் வழிநின்று தமைப்போலத் தமையன்போ
                 டீன்றதமிழ்ப் பெருங்குலத்திற் கியன்றபொது நலஞ்செயவவ்
                 வான்றவர்தஞ் சொற்பொருட்கண் ணமைந்தபழந் தமிழகமே.
 
6. தாய்மொழிப் படலம்
 
எழுசீர் விருத்தம்
 
           1.     ஊக்கமு முணர்வு முளமுதன் மக்க
                      ளுயிர்மெயி னிருந்துதம் மவரை
                 நீக்கவு மொருவர்க் கொருவர்தங் கருத்தை
                      நினைத்தவா றெதிருரை யாடி
                 மாக்களி லிருந்து மக்களா யுயர்ந்து
                      வாழவும் வகைபட முதலில்
                 ஆக்கிய மொழிநந் தமிழ்மொழி யென்றா
                      லாரிதன் பெருமையை யறைவார்.
------------------------------------------------------------------------------------------
           21. தபுதாரநிலை - மனைவியை யிழந்திருத்தல். 1. உயிர் மெய் - பிராணி.
மாக்கள் - பகுத்தறிவில்லாதவர்.