16. இன்னணம் வேண்டுஞ் சிறப்பெலாம் பொருந்தி யிருந்தமி ழகத்திடை யொளிரும் பொன்னெனப் பொலிந்து பூவென மலர்ந்து புலவர்செந் நாவிடை வளர்ந்த தன்னிக ரில்லாத் தனித்தமிழ் மொழியைத் தாய்மொழி யாகவே யுடைய மன்னிய பெரும்பேர் மருவிய தமிழ மக்களே மக்களுள் மக்கள். |
அறுசீர் விருத்தம் |
17. வில்லே ருழும்போர் வீரர்களும் வெவ்வே றான வினைவலரும் நெல்லே ருழும்வே ளாளர்களும் நிலங்காப் புடைய மன்னர்களும் மல்லே ருழும்பொன் வாணிகரும் மனையே ருழுமா தருமவரிற் கல்லா தவரே யில்லாராய்க் கற்றே யறிவைப் பெற்றாரே. |
ஷ வேறு வண்ணம் |
18. ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா ரில்லை பாடுகை யில்லா யில்லை பள்ளியோ செல்லா ரில்லை ஆடுகை யில்லா ரில்லை யதன்பயன் கொள்ளா ரில்லை நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா. 19. தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை தமிழென துயிரின் காப்புத் தமிழென துளவே மாப்புத் தமிழென துடைமைப் பெட்டி தமிழென துயாவுப் பட்டி தமிழென துரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ. 20. நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம் வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம் பாடெலாந் தமிழின் றேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம் மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமி ழகத்து மாதோ. ------------------------------------------------------------------------------------------ 17. மல் - வளம், வருவாய். 19. ஏமாப்பு - கருத்து. பட்டி - உறைவிடம். 20. பாடு - வேலை. தேட்டம் - செல்வம். பணை - வயல். மாடு - பக்கம். சொல்லாடல் (இருவரிடைப்) பேச்சு. |