21. உண்டியை யுண்ணார் பொன்பட் டுடையினை யெண்ணார் கன்னற் கண்டினைப் பேணார் செம்பொற் கலன்களைப் பூணார் வண்ணச் செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார் யாழின் தண்டினைத் தீண்டார் யாருந் தமிழ்மொழி பயிலாக் காலே. 22. பாடுபவ ருக்குமுரை பண்ணுபவ ருக்கும் ஏடதுவி ரித்துரை யிசைப்பவர் தமக்கும் நாடுநக ரோடவர் நயப்பவை கொடுத்தும் தேடிவரு வித்துமுயர் செந்தமிழ் வளர்த்தார். 23. சொற்சுவை யடுத்தொளிர் தொடைச்சுவை நிறைந்த நற்சுவை யுடைப்பொரு ணலச்சுவை செறிந்த பற்சுவை படச்செயுள்செய் பாவலர்கொ ளப்பொன் னிற்சுவை கொடுத்துய ரியற்றமிழ் வளர்த்தார். 24. மண்ணுமுழ வோடுகுழல் நண்ணுமிசை யாழின் எண்ணொடு கலந்திலகு மேழிசை பொருந்தப் பண்ணொடு திறந்தெரிபு பாடுமவர் கொள்ள எண்ணிய கொடுத்துய ரிசைத்தமிழ் வளர்த்தார். 25. உண்ணிகழ் கருத்தவ ருறுப்பினிடை தோன்ற எண்வகைய தாயவிற லேயவுய ரின்பம் நண்ணிட நடிக்குமவர் நாடுவ கொடுத்துக் கண்ணியம தாகநடி கத்தமிழ் வளர்த்தார். 26. நன்னய மமைந்தவிர் நரம்பினொடு பாடும் சொன்னய மமைந்தகுழ லோடினிய தோலின் பன்னய மமைந்திலகு பல்லிய மிசைப்போர் முன்னிய கொடுத்துயரு முத்தமிழ் வளர்த்தார். ------------------------------------------------------------------------------------------ 21. செண்டு - பூச்செண்டு. சாந்தத்திரள் - சந்தனக் கலவை. 23. பொன் இன்சுவை - பொன்னாகிய இனிய சுவை. 24. மண்ணுதல் - சீர்செய்தல். முழவு - மத்தளம். எண் - நரம்பின் ஓசையளவு. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், இளி, உழை. 25. விறல் - மெய்ப்பாடு; மெய்ப்பாடு எட்டு 11-ஆம் பாட்டில் காண்க. ஏய - பொருந்த. 26. நயம் - இனிமை. இயம் - இசைக்கருவி. முன்னிய - எண்ணிய. | |
|
|