பக்கம் எண் :


இராவண காவியம் 141

   
        38.     எத்தனையோ வகப்பொருணூ லெத்தனையோ புறப்பொருணூல்
               எத்தனையோ விசைத்தமிழ்நூ லெத்தனையோ கூத்தியனூல்
               எத்தனையோ விலக்கியநூ லெத்தனையோ விலக்கணநூல்
               அத்தனையுங் கொள்கடனீ யறிவுபெறாக் கழிமடமேன்.

        39.    மணிமலையெங் கேகுமரி மலையொடுபன் மலையெங்கே
               அணிமிகுபஃ றுளிகுமரி யாறெங்கே யவ்வாற்றால்
               பணிபறியாப் பெருவளந்தென் பாலியொடிந் திரமெங்கே
               உணியெனவே யுறிஞ்சியநீ ஓகெடுவாய் கொடுங்கடலே.

        40.    அதன்பின்ன ரேவையை யாற்றினது கரையுடைய
               புதுமதுரை யதுகண்டு புகழ்பூத்தார் பாண்டியர்கள்
               இதுவாக உறந்தையுட னெழில்பூத்த பூம்புகார்
               அதுவாகத் தமிழ்வளர்த்தே அரசிருந்தார் புகழ்ச்சோழர்.

        41.     பின்னரும் தீயாழி பெருவயிறு நிரம்பாது
               மன்னியசீர்க் கடைக்கழக காலத்தே வாய்வைத்துப்
               பொன்னலரும் புன்னையங்காப் புகார்முதலா கியவுண்டே
               இந்நிலைமை யாக்கியதா லினும்பசிதீர்ந் திவேயோ.
 
8. இலங்கைப் படலம்
 
அறுசீர் விருத்தம்
 
        1.      தறைகட லுண்டல் கண்டாம் தமிழக முழுது மொன்றை
               வறியவ னினிதி னோன்பும் வகையினன் முறையி னோடு
               திறைதர மலையுங் கானுந் திரையொடு நாடுஞ் செல்வம்
               இறையிரா வணன்முன் காத்த இலங்கைநாட் டியல்பு காண்பாம்.

        2.      பெருவள மொடுதென் பாலி பெயல்வள மருதத் தோடு
               பொருகடல் விழுங்கிக் கொண்டு போயபின் றனித்து நின்ற
               திருவிட மதன்றென் பாங்கிற் சிதறிய தீவுக் கெல்லாம்
               ஒருபெருந் தலைமை தாங்கி யொளிர்ந்ததவ் விலங்கை நாடே.
-------------------------------------------------------------------------------------------
        39. பணிபு அறியா - குன்றாத. உணி - ஆடு மாடுகளைக் கடித்துக்
குருதியையுண்ணும் ஒருவகைப் பூச்சி. 40. புகார் - காவிரிப்பூம் பட்டினம். 41. கடைக்கழக
கால முடிவு - கி.பி. 140 என்ப. 1. செல்வமாகிய திறையைத் தர. இறை - தங்கியிருந்து. 2.
மருதம் - கிழக்கு நாடு.