3. குடக்கொடு குணக்குந் தெற்குங் கொடுங்கடல் வளைத்துக் காப்ப வடக்கினில் வளங்க ளெல்லாம் வாய்திரா விடத்தின் பாங்கர் நடக்குறும் படிக்கு வாரி நடக்கிலா நிலமா வற்றின் இடைக்குட மூக்குப் போல விருந்ததவ் விலங்கை நாடே. 4. இவ்வகை சுருங்கி நின்ற விடைநில மதனைப் போக்கித் தெவ்வர்க ளணுகா வண்ணந் திரைக்கட னீரைத் தேக்கிக் கவ்விய கடலி னாழ்ந்த கடற்கிடங் கதுவுண் டாக்கிச் செவ்விய தீவ மாக்கித் திகழ்ந்தன ரிலங்கை வாணர். 5. அக்கடற் கிடங்கைத் தாண்டி யருந்தமி ழகத்திற் செல்லப் புக்கிட நாட்டு ளாங்கே பொருந்திய பரப்பி னோடும் தக்ககைத் திறத்தி னோடுஞ் சமைந்துநீங் காத காவல் மிக்கதிண் பால முந்நீர் மிதவைபோற் பொலிந்த மன்னோ. 6. இங்கமை யிலங்கை நன்னா டிடைக்கழ கத்தே பெய்யும் மங்குலைக் கொடையா லெள்ளி மலையினை வலியாற் றள்ளி எங்குமொப் பிலாது யர்ந்த இராவணண் குடைநி ழற்கீழ்த் தங்கிய தமிழ கத்தின் றலைமைபூண் டிலங்கிற் றம்மா. 7. காரெலா மகிலி னாற்றங் காவெலாம் பூவி னாற்றம் நீரெலாங் கலவை நாற்றம் நிலமெலாஞ் சேற்றி னாற்றம் ஊரெலாந் தமிழி னாற்றம் உள்ளெலா முணவி னாற்றம் யாரெலா வளமு மாற்ற வறையுதற் குரிய ரம்மா. 8. ஆவெலாங் குடப்பா னல்கு மழகெலா மனைப்பா லல்கும் காவெலாங் கனிக ளீயுங் கனியெலா மினிமை தோயும் பூவெலாஞ் செழுந்தேன் சொட்டும் புனலெலாம் பைங்கூழ் முட்டும் மாவெலாந் தமிழ்ப்பண் ணூட்டும் வளமுலா மிலங்கை நாட்டே. 9. சங்கினம் பயந்த முத்துந் தாமரை நயந்த முத்தும் வெங்களி றுகுத்த முத்தும் வேய்கழை யுதிர்த்த முத்தும் எங்குமே முத்தந் தத்தி யிலங்குத லிலங்கை யென்னும் நங்கைமற் றவற்றை யெள்ளி நகைத்தல் போற்றோன் றுமாதோ. ------------------------------------------------------------------------------------------ 3. வாரி - கடல். குடமூக்கு - தீவகற்பம் 4. தெவ்வர் - பகைவர். கிடங்கு - அகழி. 5. மிதவை - தெப்பம். 7. உள் - வீடு. 8. அல்குதல் - தங்குதல். முட்டுதல் - நிறைதல் மா - வண்டு. 9. வேய் - மூங்கில். கழை - கரும்பு மற்றவை - மற்ற நாடுகள். | |
|
|