10. பொன்னையுந் திகழு மொன்பான் மணியையும் பொருந்திச் செந்நெல் கன்னலுங் கனியுங் காயுங் கடிமலர் கிழங்குந் தேனும் புன்னையுங் கமுகு மேனைப் பொழிலொடு வாழை தாழை தென்னையும் பனையு மோங்கித் திகழ்ந்ததவ் விலங்கை நாடே. 11. நால்வகைத் திணையுந் தாய்போல் நல்குபல் கூலத் தோடு பால்வகைக் கூலந் தாங்கிப் பல்வகை வளமுந் தேங்கி நூல்வகைத் திமிழின் காட்சி நுணங்கிய பெரியா ரோடு மேல்வகைக் குடிகள் வாய்ந்து மிளிர்ந்ததவ் விலங்கை நாடே. 12. ஒலிபுனல் நடுவ தாலு முயரிய மனைக ளாலும் நிலவுமிழ் முடிக ளாலும் நெடுந்தமிழ்க் கொடிக ளாலும் அலகில்பொன் மணிக ளாலு மமைந்தபல் வளங்க ளாலும் இலகுதல் நோக்கி மேலோர் இலங்கையென் றிசைத்தா ரம்மா. 13. முகர்பொரு ளொன்றோ குன்றா மூவின மொடுநன் மக்கள் நுகர்பொரு ளெல்லா மான்ற நூலவ ரியற்றிக் கொண்டு பகர்பொரு ளினவா மென்னப் பயன்படப் பொலிந்தெந் நாளும் நிகர்பொரு ளினவா யெங்கும் நிறைந்ததவ் விலங்கை நாடே. 14. கைத்தொழில் வணிகத் தோடேர்க் களத்தொழி லெனுநீப் பில்லா முத்தொழில் களுமெல் லோரு முறையொடு பயில்கை யாலே இத்தொழில் தெரியா தாரீங் கின்றெனச் செருக்கி நாளும் எத்தொழில் களுக்குஞ் சான்றா யிருந்ததவ் விலங்கை நாடே. 15. முத்தமிழ் வளர்க்க மேலோர் முறைமையி னிறைமை தாங்கிப் புத்தொளி பெருகி யெல்லாப் பொருளுநற் பொருள வாக வைத்திழி மடிமை தன்னை மருந்துக்கு மறியா ராய கைத்தொழி லாளர் வாழ்வு கவின்றதவ் விலங்கை நாடே. 16. கொள்வது மிகைகொ ளாது கொடுப்பதுங் குறைகொ டாதே உள்வது செயல தாக ஊதியங் குறையு மேனும் எள்வது புரியா தென்று மியல்வது புரிந்து நேர்மை விள்வதில் வணிகர் வாழ்வு மிகுந்ததவ் விலங்கை நாடே. ------------------------------------------------------------------------------------------ 10. கன்னல் - கரும்பு. 11. கூலம் - தவசம், பயறு. கூலம் - மாடு நுணங்கிய காட்சி - கூரிய அறிவு. 12. முடி - மாடத்தின் உச்சி. இலங்கை - தீவு. 13. மூவினம் - ஆடு மாடு எருமை. 16. உள்வது - எண்ணுவது. எள்வது - இகழத்தக்கது. விள்ளுதல் - நீங்குதல். | |
|
|