2. புனைமலர்ப் பூங்கொம் பென்னப் பொன்னியல் பாவை யென்ன வனையுமோ வியமே யென்ன வளர்மகள் மணத்தை யுன்னிப் பனையிடைத் தோன்றும் வம்புப் பாளைபோற் பருவ மன்றி மனையிடைப் பெயர மாயோன் மனக்கொடு பெயர லானான். 3. பாடியைக் கலைத்து முல்லைப் படைகளைத் திரட்டி யின்பங் கூடிய வுறவி னோடுங் கொழுந்தமிழ்க் குடிக ளோடும் பீடுயர் அருவிக் குன்றம் பின்னதா முன்ன தாக ஆடுநீள் கொடிமா டஞ்சூழ் அணிமிகு முதிரை புக்கான். 4. புக்கவ னறிவுங் கேண்மைப் பொறுப்புநல் விருப்புஞ் சேரத் தொக்கநல் லமைச்ச ரோடு சூழ்ந்துநன் மணத்துக் கேற்ற தக்கநன் னாளைத் தேர்ந்து தமிழ்மரு மகனோ டான்ற ஒக்கலோ டுரியோர்க் கெல்லா மோலையும் போக்கி னானே. 5. போக்கிய பின்ன ரந்தப் பொருவறு முதிரைக் கோனும் ஆக்கியா வனவே யெல்லா மயலவ ரவாவற் கேற்பத் தேக்கிய செல்வந் தங்குத் திருநக ரணிமி னென்று மாக்களி றதன்மே லாணை மணிமுர சறைவித் தானே. 6. முரசொலி யதுகேட் டந்த முதிரைமா மக்க ளெல்லாம் விரைசெயும் பொருளாற் பூவான் மிளிர்மணி யொடுசெம் பொன்னால் உரசுபொற் சுண்ணந் தன்னா லொப்பனை செய்தார் தங்கள் அரசியின் மணமே யென்றா லணிவியா ரெவர்தா னம்மா. | கலி விருத்தம் | 7. குன்றினி லுயர்மாடக் கொடியணி தெருவெல்லாம் கன்றொடு குலைவாழை கமுகொடு கொடிமுல்லை இன்றமிழ் மணமாவி னிலையொடு குலைதெங்கு மன்றலி னிணர்சாந்தம் மருமல ரணிவாரும். 8. மண்சுதை யதுகொண்டு வாயிலி னிடுவாரும் வெண்சுவ ரதுசுண்ணம் வெள்ளென வணிவாரும் கண்கவர் கொடிமாடங் கதிர்மணி புனைவாரும் தண்பொழி லனபந்தர் தடவழி யிடுவாரும். ------------------------------------------------------------------------------------------ 2. வம்புப்பாளை - காலமல்லாக்காலத்தில் தோன்றும் பாளை. 6. உரசுதல் - பூசுதல். 7. மன்றல் - மணம். இணர் - கொத்து. மரு - மணம். 8. சுதை - சுண்ணாம்பு | |
|
|