பக்கம் எண் :


இராவண காவியம் 217

   
        9.      பூந்தொடை புனைவாரும் புதுமல ருதிர்வாரும்
               சாந்தது தெரிவாருந் தண்பனி தூஉவாரும்
               நாந்தற வகிலோடொண் ணறும்புகை யிடுவாரும்
               மூந்தொளி யதுகாலும் முத்தணி புனைவாரும்.

        10.      இறையென வரைவாரு மிறைவியை வரைவாரும்
               அறமென வரைவாரு மன்பென வரைவாரும்
               முறையொடு தமிழ்வாழ்க முயல்கென வரைவாரும்
               நிறையுற வினகோலம் நெடுந்தெரு விடுவாரும்.

        11.     ஆடியி னொளிகாலு மழகிய சுவரெல்லாம்
               ஓடிய விழியுண்ணும் ஓவியம் புனைவாரும்
               நீடிய மனைதோறும் நிலவுமிழ் படமோடு
               கூடிய வேடாணிக் கொடியினை நடுவாரும்.

        12.     தொலையுயர் நெடுவாயிற் றோரண நடுவாரும்
               மலையென வுயர்கூட மன்றம திடுவாரும்
               நிலவுமிழ் நீண்மாடம் நெடுதிரை யிடுவாரும்
               கலைமலி நகரெங்குங் கைவினை செய்வாரும்.

        13.     நீணகர் மறுகாரும் நெடுமதி லகமெங்கும்
               ஏணிக ளிடுவாரு மியலறை தொடுவாரும்
               தோணிய படியெல்லாந் தொகைவகை விரியாக
               மாணுற நகரெங்கும் மணவணி யணிவாரே.

        14.     இன்னண மிதன்மேலு மெழினக ரவரெல்லாம்
               பொன்னினு மணியானும் பூவினு மருவானும்
               மன்னிய வணிசெய்ய வளம்படு பொருளானும்
               உன்னிய படியெல்லா மூரணி செய்வாரே.

        15.     ஈனிய படியெல்லா மிணையிலி புனையூரைப்
               பூநிறை கானென்கோ புனன்மலி கடலென்கோ
               நாநிறை புலவோர்செய் நற்றமிழ் நூலென்கோ
               நானில மதுவென்கோ நகரென் கோதானே.

        16.     மின்னியல் மணிபொன்னால் விளங்கணி கலனாலும்
               மன்னிய வுடையாலும் மருவொடு மலராலும்
               உன்னிய படியெல்லா மொப்பனை செய்வாரும்
               பொன்னியல் சிறுவர்க்குப் புதுவது புனைவாரும்.
-------------------------------------------------------------------------------------------
        9. தூஉ - தூவுதல். நாந்துதல் - நனைதல். நாந்துஅற - ஈரம்போக. 11. ஆடி - கண்ணாடி. படம் - ஓவியச்சீலை. ஆணி - எழுத்தாணி. 15. ஈனிய - தோன்றிய.