பக்கம் எண் :


218புலவர் குழந்தை

   
அறுசீர் விருத்தம்
 
         17.    தொய்யில்க ளெழுது வாருந் தொடிபுதி துழுது வாரும்
               ஐயெனுங் கரிய கூந்தற் ககிற்புகை யூட்டு வாரும்
               மையது கூட்டு வாரும் மலர்விழி தீட்டு வாரும்
               செய்யகை நீட்டு வாருஞ் செம்பஞ்சை யூட்டு வாரும்

         18.    மாவிருந் துண்ணு வாரும் மனைவளம் பண்ணு வாரும்
               பாவிருந் துண்ணு வாரும் பண்ணியந் தின்னு வாரும்
               காவிருந் துண்ணு வாருங் கடிநகர் நண்ணு வாரும்
               கோவிருந் துண்ணு வாருங் கோயிலை யண்ணு வாரும்.

         19.    இப்படி நகர மக்கள் எண்ணிய படியாங் கெல்லாம்
               ஒப்பனை செய்து கொண்டுள் ளுவப்பொடு தமிழர்க் கெல்லாம்
               நப்பெருந் தலைவி யான நங்கையின் மணஞ்செய் நன்னாள்
               இப்பவென் பதுவுஞ் சோர்ந்தே யேக்கழுத் தியங்கி னாரே.

         20.    வான்கவிந் தென்ன நீண்ட மணவறைப் பந்த ரிட்டுத்
               தேன்கவிந் தலர்ந்த தொங்கல் மணியொடு தெளிய நாற்றி
               மீன்கவிந் தென்னத் தூய வெண்மணல் பரப்பி நாப்பண்
               கான்கவிந் தென்னப் பூச்செய் கடிமண வறையுங் கண்டார்.

         21.    எழுதெழில் மாடத் தும்ப ரேற்றிய கொடிக ளெல்லாம்
               முழுதுல களிக்கு மண்ணல் முடியிருந் தடியின் காறும்
               அழகினைக் காணப் புட்க ளடைந்தன போலும் நல்லார்
               பழுதற விறகு கொண்டு பறப்பது போலுந் தோன்றும்.

         22.    ஒருதுளி யிடமு மின்றி யூரெலாம் புறம்பு முள்ளும்
               விரிகதி ரொடுமீன் போல விடிவிவக் கெரித லாலே
               இரவொடு பகலொன் றாக இறைதிரு மணஞ்செய் நன்னாள்
               வரவறி யாது மக்கள் மயங்கியே யியங்கி னாரே.
-------------------------------------------------------------------------------------------
         17. தொய்யில் - தோட்கோலம். உழுதல் - அணிதல். ஐ - அழகு, மென்மை. செம்பஞ்சு - செம்பஞ்சுக் குழம்பு. 19. ந - சிறந்த. சோர்ந்து - மறந்து. ஏக்கழுத்தம் - இறுமாப்பு. 20. நாற்றி - தொங்க விட்டு. நாப்பண் - நடுவே